உயிரிழப்பு இல்லாமல் தப்பித்தது எப்படி? 5 முக்கிய காரணங்கள் கூறுகிறது ரயில்வே
உயிரிழப்பு இல்லாமல் தப்பித்தது எப்படி? 5 முக்கிய காரணங்கள் கூறுகிறது ரயில்வே
ADDED : அக் 13, 2024 12:31 AM

சென்னை: கவரைப்பேட்டை ரயில் விபத்தில், உயிர்இழப்பு எதுவும் ஏற்படாததற்கு, ஐந்து முக்கிய காரணங்கள் இருப்பதாக, ரயில்வே துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
ஒடிசாவில் நடந்த கோரமண்டல் ரயில் விபத்துக்குப் பின், வளைவுகள் அதிகமாக உள்ள பகுதிகளில், விரைவு ரயில்களின் வேகம் மணிக்கு, 130 கி.மீ., இருந்து, 100 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ரயில் மணிக்கு, 100 கி.மீ., வேகத்துக்குள் தான் இயக்கப்பட்டுள்ளது
மேலும் ரயில், மெயின் லைனில் செல்லாமல், லுாப் லைனில் செல்லும்போது ஓட்டுனர் உஷராகி, அவசர கால பிரேக் பயன்படுத்தியதால், வேகம், 75 கி.மீ., ஆகக் குறைந்து கொண்டே சென்று மோதியுள்ளது. அதனால், பாதிப்பு குறைந்துள்ளது
இந்த சம்பவம் நடந்த உடனே, அருகில் இருந்த மற்றொரு ரயில் பாதையில், எந்த ரயிலும் செல்ல அனுமதிக்கவில்லை. அந்த பாதையில் வர வேண்டிய ரயில்களும் நிறுத்தப்பட்டன. இதனால், ஒடிசாவைப் போல, மற்றொரு அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க முடிந்துள்ளது
லுாப் லைனில், 200 மீட்டர் துாரத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் பெட்டிகள் காலியாக இருந்துள்ளன. மேலும், அந்த ரயிலின் கடைசியில் இருந்த, 'பிரேக் வேகனில்' தான் விரைவு ரயில் மோதி இருக்கிறது. இதனால், சேதம் குறைந்துள்ளது
விபத்துக்குள்ளான விரைவு ரயிலில், எல்.எச்.பி., வகை நவீன பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. ரயில் தடம் புரண்டாலும், ஒன்றுடன் ஒன்று மோதினாலும், தாக்கத்தை உள்வாங்கிக் கொண்டு பயணியரை காக்கும் புதிய தொழில்நுட்ப வசதி யுடன் கூடிய, 'கப்ளிங்' கொண்டவை. விபத்து நடந்தால், பெட்டிகள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக மேல் ஏறி நிற்காது.
இதனால், பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படாது. எனவே, இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்படாததற்கு இதுவும் ஒரு காரணம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.