ADDED : அக் 25, 2024 12:36 AM

தீபாவளி வந்து விட்டாலே சுட்டீஸ், பெண்கள், மூத்த குடிமக்கள் பாகுபாடியின்றி கொண்டாட்ட மழையில் நனைவர். இந்தாண்டும் தீபாவளி பண்டிகையை கோலாகமாக கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை வந்த விதம் குறித்து நமது வாசகர்களுக்காக:
தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எண்ணெய்க் குளியல் (கங்கா ஸ்நானம்) செய்வர். புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர். இனிப்புகள் செய்து உறவினர்கள், நண்பர்களுடன் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி, வாழ்த்து பெறுவர்.
தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்குபல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஹிந்துக்களின் பிரதான பண்டிகை. வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக இது கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை முற்காலத்தில் ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாக இருந்தது.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை நாட்களில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் பெரும்பாலான ஆண்டுகளில், தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது. சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன்தினம், நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறது.
கிரிகோரியன் நாட்காட்டியின் படி,அக்டோபர் 17ல் இருந்து நவம்பர் 15 வரையிலான நாட்களில் தீபாவளி பண்டிகை வருகிறது. இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேஷியா ஆகிய நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். மலேஷிய இந்தியர்கள் தீபாவளியை கோலாகலமாக கொண்டாடுகின்றனர். தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராண கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.
புராண கதைகளின்படி, மாயோனுக்குஇரண்டு மனைவி. அதில், நிலமகளுக்கு பிறந்தவன் ஒரு அசுரன். அவன்தான் நரகாசுரன். அப்போது, விஷ்ணு பகவான் வராக அவதாரம் எடுத்திருந்தார்.
தவத்தின் பலனாக நரகாசுரன், தன் தாயால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் பெற்றிருந்தான். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, விஷ்ணு சமயோஜிதமாக சத்யபாமா வாயிலாக நரகாசூரனை போரில் வீழ்த்துகிறார்.
இறக்கும் தருவாயில் இருந்தநரகாசூரன், நான் மறைகின்ற இந்த நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என் பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும், மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி, வெடி வெடித்துக் கொண்டாட வேண்டும் என்று வேண்டினான்.
மகாவிஷ்ணுவும், சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி, நரகாசுரன் மறைந்த நாளை, மகிழ்ச்சி பொங்கிய நாளாக, தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது,
வடமாநிலங்களில், ராவணனை வென்று, சீதாபிராட்டியை மீட்ட ராமபிரான், லட்சுமணனுடன் அயோத்தி திரும்பிய நாள், தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. வால்மீகி ராமாயணத்தில் முதன்முதலாக தீபாவளி பற்றிய குறிப்புகள் உள்ளன.
சீக்கியர்கள், 1577ல் பொற்கோவில் கட்டுமானப் பணிகளை துவங்கினர். அத்தினத்தையே தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர். மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தை சமணர்கள் தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர்.தீபாவளி கொண்டாட்டத்திற்கு என,இவ்வளவு புராண கதைகள் உள்ளன. எது, எப்படியோ தீபாவளி பண்டிகையை நாம் குதுாகலத்துடன் கொண்டாடுவோம்.