கைதானவர் தான் குற்றவாளி என எப்படி முடிவு செய்தீர்கள்? அரசுக்கும், போலீசுக்கும் ஐகோர்ட் சரமாரி கேள்வி
கைதானவர் தான் குற்றவாளி என எப்படி முடிவு செய்தீர்கள்? அரசுக்கும், போலீசுக்கும் ஐகோர்ட் சரமாரி கேள்வி
ADDED : டிச 28, 2024 01:14 AM
சென்னை: 'புலன் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், கைதானவர் மட்டுமே பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார் என, போலீஸ் கமிஷனர் எப்படி முடிவுக்கு வந்தார்' என்று, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை அண்ணா பல்கலை மாணவி, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி, வழக்கறிஞர்கள் வரலட்சுமி, மோகன்தாஸ் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.லட்சுமிநாராயணன் அடங்கிய விடுமுறை கால சிறப்பு அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் தரப்பில், வழக்கறிஞர்கள் வி.ஜெயபிரகாஷ் நாராயணன், ஜி.எஸ்.மணி ஆகியோர் வாதாடியதாவது:
புகழ்பெற்ற அண்ணா பல்கலையில், மாணவிக்கு பாலியல் வன்முறை நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் விபரங்கள் இடம் பெற்ற முதல் தகவல் அறிக்கை, காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது; இது, சட்டவிரோதம்.
வழிகாட்டுதல்கள்
பொது தளத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியானதையும், மாணவிக்கு நடந்த பாலியல் வன்முறை சம்பவத்தில் கைதான நபர் மீது, 20 குற்ற வழக்குகள் உள்ளதையும், மாநகர போலீஸ் கமிஷனர் ஒப்புக் கொண்டுள்ளார்.
முதல் தகவல் அறிக்கையை வெளியிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கில் கைதானவர் அரசியல் கட்சியை சேர்ந்தவர். அவரது பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க வேண்டும்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுமியர் சார்ந்த வழக்கு விபரங்களை வெளியிடக்கூடாது. இதுபோன்ற வழக்குகளை, போலீசார் எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பாக, நீதிமன்ற வழிகாட்டுதல்கள் உள்ளன.
அதை மீறி, முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது; இது, மிகவும் தீவிரமான விஷயம். இடைக்காலமாக இந்த வழக்கை, ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பில், சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர், மாநிலத்தில் தடையின்றி உலா வருகின்றனர். சமீபத்தில் சென்னையில் மட்டும், மூன்று பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளன. 'யு -டியூபர்' மீது குண்டர் தடுப்பு சட்டத்தை காவல் துறை பிரயோகிக்கிறது. ஆனால், தொடர் குற்றங்களில் ஈடுபடுவோரை விட்டு விடுகிறது.
பல வழக்குகள்
கைதான நபருக்கு எதிராக, இந்த பாலியல் வன்முறை வழக்கு மட்டுமே உள்ளது என, போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். ஆனால், கைதானவர் மீது பல வழக்குகள் உள்ளன; அதுகுறித்தும் விசாரிக்க வேண்டும். அண்ணா பல்கலை வளாக பகுதியில் பொருத்தப்பட்ட, 'சிசிடிவி கேமரா'க்களில், 56 செயல்படவில்லை.
இவ்வாறு அவர்கள் வாதாடினர். அப்போது, 'புலன் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், கைதான நபர் மட்டுமே பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார் என, போலீஸ் கமிஷனர் எப்படி முடிவுக்கு வந்தார்; அதற்கான தேவை என்ன? கைதானவர் காலில் கட்டு ஏன் போடப்பட்டுள்ளது' என்று, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன் ஆகியோர் கூறியதாவது:
பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில், கைதான நபரின் விபரங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளது என்று தான், போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார். கைதான நபரை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் தப்பியோட முயற்சித்தார். அவரை, போலீசார் விரட்டி சென்றபோது, தவறி விழுந்ததால் காயம் ஏற்பட்டுள்ளது. வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து விபரங்களும் தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விரிவான அறிக்கை
இதையடுத்து, 'செய்தியாளர்களை சந்திக்கும் முன், நடத்தை விதிகளின்படி அதிகாரிகள் அரசு அனுமதி பெற வேண்டுமா? முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு யார் பொறுப்பு என்பது தொடர்பாக விரிவான அறிக்கையை, தமிழக அரசு மற்றும் காவல் துறை தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், 'மாணவியர் பாதுகாப்புக்கு அண்ணா பல்கலை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்தும், நிர்பயா நிதி செலவு குறித்த விபரங்கள் குறித்தும், பல்கலை 'விசாகா' குழுவில் எத்தனை புகார்கள் வந்துள்ளன என்பது தொடர்பாகவும், அண்ணா பல்கலை அறிக்கை அளிக்க வேண்டும்' என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விசாரணை இன்றும் தொடர்கிறது.