'இப்போது மட்டும் எப்படி தகுதியை கண்டுபிடிச்சீங்க?' நிலுவை தொகை கேட்டு பெண்கள் முற்றுகை
'இப்போது மட்டும் எப்படி தகுதியை கண்டுபிடிச்சீங்க?' நிலுவை தொகை கேட்டு பெண்கள் முற்றுகை
UPDATED : ஜூலை 25, 2025 03:48 PM
ADDED : ஜூலை 24, 2025 10:43 PM

சென்னை:மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கும் பெண்கள், திட்டம் துவங்கிய நாள் முதல் தற்போது வரையிலான தொகையையும் சேர்த்து தரக்கோரி, சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, 202௩ செப்டம்பரில் தமிழக அரசு துவக்கியது.
இதற்காக பயனாளிகளை தேர்வு செய்ய, அந்தாண்டு ஜூலையில், 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்களிடம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
அதில் உரிமை தொகை கேட்டு, 1.63 கோடி பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், அரசு விதித்த நிபந்தனைகள் அடிப்படையில், 1.15 கோடி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், விடுபட்டோருக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, மீண்டும் விண்ணப்பம் வழங்கி, பயனாளிகளை தேர்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.
ஏற்கனவே மகளிர் உரிமை தொகை பெற தகுதியிருந்தும், தகுதியில்லை எனக்கூறி நீக்கம் செய்யப்பட்ட பலரும் தற்போது தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், சேப்பாக்கம் - ஆயிரம்விளக்கு தொகுதியில் தகுதி பெற்ற 150க்கும் மேற்பட்ட பெண்கள், தேனாம்பேட்டை மண்டல மாநகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
அப்போது, மகளிர் உரிமை தொகை திட்டம் துவங்கப்பட்ட நாள் முதல், தற்போது வரையிலான நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
'ஏற்கனவே தகுதி இல்லை என எங்களை நீக்கிய நீங்கள், இப்போது எப்படி தகுதி உள்ளவர்களாக தேர்ந்தெடுத்தீர்கள்?' என, அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.

