வாடகை ஆணையத்தின் அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பும் 'ஹவுஸ் ஓனர்'கள் மற்ற பாக்கிகளை வசூலிப்பது எப்படி?
வாடகை ஆணையத்தின் அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பும் 'ஹவுஸ் ஓனர்'கள் மற்ற பாக்கிகளை வசூலிப்பது எப்படி?
ADDED : டிச 25, 2024 12:54 AM
சென்னை:வாடகை வீட்டை குடியிருப்பவர் காலி செய்வது தொடர்பான வழக்கில், வாடகை நிலுவையை செலுத்த மட்டுமே உத்தரவிட முடியும் என்றும், இதர கட்டண நிலுவையை செலுத்த உத்தரவிட முடியாது என்றும், இதற்கான ஆணையம் தெரிவிப்பதால், வீட்டு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
வீடு, மனையை வாடகை அல்லது குத்தகை விடுவதில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க, 35 மாவட்டங்களில், கோட்ட அளவில் வாடகை ஆணையங்கள் ஏற்படுத்தப்பட்டன. வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், இந்த ஆணையங்கள் செயல்படுகின்றன.
வீட்டு வாடகை கொடுக்காமல் இருப்பது, காலி செய்ய மறுப்பது போன்ற புகார்களை, ஆணையங்கள் விசாரிக்கின்றன. இந்த வழக்குகளில், வாடகை பாக்கியை உரிமையாளர்களுக்கு செலுத்த ஆணையம் உத்தரவிடுகிறது.
ஆனால், சம்பந்தப்பட்ட வாடகைதாரர், பல ஆண்டுகளாக நிலுவை வைத்துள்ள மின்சார கட்டணம், பராமரிப்பு கட்டணங்களை வசூலிக்க, ஆணையம் உத்தரவிடுவதில்லை.
இது குறித்து, சென்னை பெரம்பூரை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் பி.கல்யாணசுந்தரம் கூறியதாவது:
வாடகை வீட்டுவசதி சட்ட விதிகளின்படி, வாடகைதாரரிடம் இருந்து, அனைத்து நிலுவை தொகையும் வீட்டு உரிமையாளருக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வாடகை என்ற தலைப்பிலேயே மின்சாரம் உள்ளிட்ட இதர கட்டணங்கள் சேர்த்து பார்க்கப்படுகின்றன.
ஆனால், இது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் கோட்டாட்சியர் நிலையிலான அதிகாரிகள், வாடகை நிலுவையை வசூலிப்பதற்கு மட்டுமே உத்தரவிடுகின்றனர். மின்சார கட்டணம், பராமரிப்பு கட்டண நிலுவையை வசூலிக்க, காவல் துறையை அணுகுமாறு அறிவுரை வழங்குகின்றனர்.
இதனால், வாடகை ஆணைய உத்தரவுக்கு பின், வீட்டு உரிமையாளர்கள் அலைக்கழிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், குடியிருப்போர் செலுத்த வேண்டிய அனைத்து வகை கட்டண பாக்கிகளையும் வசூலித்து தரும் வகையில் ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் அவசியம். இதில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசு அமல்படுத்திய வாடகை வீட்டுவசதி சட்டம் மற்றும் விதிகளில், வாடகை குறித்து மட்டுமே உள்ளது. மின் கட்டணம், பராமரிப்பு கட்டணம் போன்ற அம்சங்கள் அதில் இல்லை.
ஆனால், வாடகையின் உள்ளடக்கமாகவே, அந்த கட்டணங்களையும் சேர்த்து, உரிமையாளர்கள் பார்க்கின்றனர். இப்பிரச்னையில் தெளிவு ஏற்படுத்த, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.