மாநில சுயாட்சி எப்படி பிரிவினைவாதமாகும்? நயினாருக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி
மாநில சுயாட்சி எப்படி பிரிவினைவாதமாகும்? நயினாருக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி
UPDATED : ஏப் 17, 2025 03:03 AM
ADDED : ஏப் 16, 2025 06:20 PM

சென்னை:'மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி என்பது, தமிழக மக்களின் உணர்விலும் உயிரிலும் கலந்த முழக்கம்' என, தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை::-
சட்டசபையில், மாநில சுயாட்சி தொடர்பாக முக்கிய அறிவிப்பை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். மாநில நலனில் அக்கறை இல்லாத அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வும் வெளிநடப்பு செய்தன. மாநில நலன் மற்றும் மாநில சுயாட்சி சார்ந்து, தி.மு.க., போராடிய போதெல்லாம், 'பிரிவினைவாதம் பேசுகிறது தி.மு.க.,' என, அவதுாறு பரப்பினர்.
அதே அவதுாறை நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். 'மாநிலங்களை பிரிக்க வேண்டும் என பிரிவினைவாதத்தை முதல்வர் துாண்டுகிறார்' என, அவர் பேசியுள்ளார். 'மாநிலங்கள் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவையாக விளங்கினால்தான் வளர்ச்சி அடையும்; இந்தியாவும் வலிமை பெறும்' என, சட்டசபையில் ஸ்டாலின் பேசியதை கேட்டிருந்தாலே, அவரது நல்ல நோக்கம் புரிந்திருக்கும்.
இந்தியா என்பது முழு உடல். அதன் உறுப்புகள் தான் மாநிலங்கள் என்பதையே, அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்துகள் சொல்கின்றன. மாநிலங்களுக்கான பலம் என்பது இந்தியாவிற்கான பலம். அதாவது, மாநிலங்கள் பலம் பெற்றால் தான் இந்தியா வலுப்பெறும். நம் உடலில் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கினால் தான், முழு உடலும் வலுப்பெறும் என்ற அடிப்படைக்கூட தெரியாதவராக நயினார் நாகேந்திரன் இருக்கிறார்.
அண்ணாதுரை உருவாக்கிய மாநில சுயாட்சி என்கிற கருவுக்கு, கருணாநிதி உருவம் கொடுத்தார்; அந்த உருவத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் செயல் வடிவம் கொடுத்துள்ளார். இந்த அரசியல் நயினார் நாகேந்திரனுக்கு புரியவில்லை என்றால், அ.தி.மு.க., என்ற திராவிடக் கட்சியில் இருந்தார் என்பதற்கு வெட்கப்பட வேண்டாமா?
தமிழகத்திற்கு மட்டும் உரிமைகளை தி.மு.க., கேட்கவில்லை. மத்திய, மாநில அரசுகள் இடையேயான உறவுகளை மேம்படுத்தும் செயல் எப்படி பிரிவினைவாதமாகும்?
தி.மு.க., பிரிவினைவாதம் பேசுகிறது என, திராவிட எதிர்ப்பாளர்கள் பேசிய, 50 ஆண்டு கால பழைய முனை மழுங்கிய வாதத்தை விட்டுவிடுங்கள். மத்திய அரசின் கட்டளைக்கு அடிபணியும் மாநிலம் தமிழகம் இல்லை; மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கை முழக்கம் தி.மு.க.,வுடையது மட்டுமல்ல, தமிழக மக்களின் உணர்விலும் உயிரிலும் கலந்த முழக்கம்.
தமிழக உரிமைகளை பறித்தால் முன்பைபோல, பா.ஜ., 2026 தேர்தலிலும் 'டிபாசிட்' கூட வாங்காது என, எஜமானர்களுக்கு நயினார் நாகேந்திரன் சொல்வது நல்லது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.