நிலுவையில் எத்தனை பிடிவாரன்ட்? டி.ஜி.பி.,யிடம் கேட்கிறது ஐகோர்ட்!
நிலுவையில் எத்தனை பிடிவாரன்ட்? டி.ஜி.பி.,யிடம் கேட்கிறது ஐகோர்ட்!
ADDED : ஜூலை 15, 2025 06:37 AM

சென்னை; எத்தனை வழக்குகளில், 'பிடிவாரன்ட்' உத்தரவுகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக டி.ஜி.பி., மற்றும் சென்னை போலீஸ் கமிஷனருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராஜராஜசோழன் என்பவருக்கு எதிராக, பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அதை அமல்படுத்த நீலாங்கரை போலீசாருக்கு உத்தரவிடக்கோரி ஜமுனா சிவலிங்கம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் பிறப்பித்த உத்தரவு:
கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்த பிடிவாரன்ட் உத்தரவை, போலீசார் இதுவரை செயல்படுத்தாமல் உள்ளனர். இதேபோல, பல வழக்குகள் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. நீதிபதி, மாஜிஸ்திரேட் மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் பிடிவாரன்ட்கள் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.
இல்லாவிட்டால், வாரன்ட் செயல்படுத்தாதது குறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து, புதிதாக வாரன்ட் பிறப்பிக்க கோர வேண்டும். அதைவிடுத்து, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வாரன்ட்களை நிலுவையில் வைத்திருக்க போலீசாருக்கு அதிகாரம் இல்லை.
எனவே, மாநிலம் முழுதும் எத்தனை வழக்கு களில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என்பது குறித்து, வரும் 23ம் தேதிக்குள், டி.ஜி.பி., மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அதேபோல, கீழமை நீதிமன்றங்களில் எத்தனை வழக்குகளில் பிடிவாரன்ட்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளன என்பது குறித்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.