தமிழகத்துக்கு வந்த முதலீடுகள் எவ்வளவு? அறிக்கை கேட்கிறார் அமைச்சர் முருகன்
தமிழகத்துக்கு வந்த முதலீடுகள் எவ்வளவு? அறிக்கை கேட்கிறார் அமைச்சர் முருகன்
ADDED : ஆக 05, 2025 11:37 PM
சென்னை:'தமிழகத்துக்கு வந்த முதலீடுகள் குறித்து, மக்களுக்கு தெரியும் வகையில், வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என, மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
துாத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம், துாத்துக்குடி துறைமுக மேம்பாட்டு பணிகள், எளிமையான சரக்கு போக்குவரத்து வசதிக்கு தேசிய நெடுஞ்சாலை, ரயில் திட்டங்கள் என, தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை, மத்திய அரசு முனைப்புடன் செய்து வருகிறது.
ஆனால், தமிழக அரசு, மத்திய அரசின் திட்டங்களுக்கு தங்கள் பெயரில், 'ஸ்டிக்கர்' மட்டுமே ஒட்டிக் கொண்டிருக்கிறது .
தமிழகத்தில், 8,000 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய திட்டமிட்டிருந்த இரு வெளிநாட்டு நிறுவனங்கள், தமிழகத்தில் சாதகமான சூழல் இல்லை என்று கூறி, ஆந்திரா மாநிலம் ஸ்ரீசிட்டியில் முதலீடு செய்ததாக சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியானது. இதுதான் தமிழகத்தின் இன்றைய எதார்த்த நிலை.
திருநெல்வேலி, நாங்குநேரி தொழில் பூங்கா, விருதுநகர் ஜவுளி பூங்கா, மதுரை, சிவகங்கை என, பல மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட தொழில் மேம்பாட்டு திட்டங்கள் வெற்று அறிவிப்பாகவே உள்ளன. அவற்றின் நிலை என்ன என்பதை, ஸ்டாலின் அறிவிப்பாரா?
தமிழகத்தில் இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு; எந்தெந்த நிறுவனங்கள் ஆலையை துவங்கி உள்ளன; முதலீடு மாநாடு நடத்தி கிடைத்த பயன் என்ன? இவற்றை எல்லாம் மக்களுக்கு அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தமிழகத்துக்கு வந்த முதலீடுகள் குறித்து, மக்களுக்கு தெரியும் வகையில், வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.