UPDATED : அக் 27, 2026 07:03 PM
ADDED : அக் 27, 2026 06:59 PM
திருப்பூர்: கூட்டுறவுச் சங்கங்கள், ரேஷன் கடை ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்குவது தொடர்பாக, கூட்டுறவுத் துறை அதிகாரிகள், முன்மொழிவுகளைத் தயாரித்து பதிவாளருக்கு அனுப்பியுள்ளனர்.
போனஸ் வழங்குவது தொடர்பாக, கூடுதல் பதிவாளர் அண்மையில் அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் அறிவுறுத்தல் அனுப்பியிருந்தார். கூட்டுறவுச் சங்கங்களின் நிதிநிலை, ஊழியர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களின் அடிப்படையில் அரசுக்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு, உபரி இல்லாத கூட்டுறவுச் சங்க ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ், 1.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்பட்டது. மற்ற சங்கங்களில் 20 சதவீதம் வரை போனஸ் வழங்கப்பட்டது. லாபமில்லாத சங்கங்களில், அபெக்ஸ் மற்றும் மத்திய கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு 3,000 ரூபாய்; தொடக்கக் கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு, 2,400 ரூபாய் கருணைத் தொகை வழங்கப்பட்டது.
அரசின் இறுதி உத்தரவுக்குப் பின்னரே நடப்பாண்டு போனஸ், கருணைத் தொகை குறித்த முடிவு உறுதியாகும். கடந்த ஆண்டுக்குக் குறையாமல் போனஸ் வழங்குவதுடன், விரைவில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
