இதற்கு எப்படி முட்டுக்கொடுப்பீர்? இ.பி.எஸ்.,சுக்கு ஸ்டாலின் கேள்வி
இதற்கு எப்படி முட்டுக்கொடுப்பீர்? இ.பி.எஸ்.,சுக்கு ஸ்டாலின் கேள்வி
ADDED : டிச 18, 2025 06:20 AM

சென்னை: 'பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா?' என கேள்வி எழுப்பி உள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
அவரது அறிக்கை: பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும், 'வளர்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்புச் சட்டம்' குறித்து, எதிர்க்கட்சியான அ.தி.மு.க., நிலைப்பாடு என்ன?
மூன்று வேளாண்மை சட்டம், குடியுரிமை சட்டம் போல, இதிலும் அமித் ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப் போகிறாரா பழனிசாமி? தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், காந்தியின் பெயரை அகற்றிவிட்டு, சொன்னால் வாய் சுளுக்கிக் கொள்ளும்படி, ஹிந்தியில் பெயரிட்டிருக்கின்றனர். ஹிந்தித் திணிப்பை எதிர்த்து வென்ற அண்ணாதுரையின் பெயரை, கட்சியின் பெயரில் வைத்துக் கொண்டு, இதை எதிர்க்கக்கூடவா தயக்கம்?
திட்டத்துக்கான நிபந்தனைகள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்குமாம். நிதிக்கு மட்டும் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்பதை, அ.தி.மு.க., எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக் கொள்கிறதா? ஜெயலலிதா இருந்திருந்தால், இதை ஒப்புக் கொண்டிருப்பாரா? இதற்கு, எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் பழனிசாமி? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

