கும்பகோணம் மாநகராட்சியிலும் மிகப்பெரும் ஊழல்: எச்.ராஜா
கும்பகோணம் மாநகராட்சியிலும் மிகப்பெரும் ஊழல்: எச்.ராஜா
ADDED : ஜூலை 13, 2025 03:39 AM

மதுரை : ''தி.மு.க., ஆட்சி என்றால் ஊழல் எனும் நிலை உள்ளது,'' என தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் எண்ணிக்கை மட்டும் தேர்தலில் வெற்றியை முடிவு செய்யாது. இந்திராவுக்கு எதிராக 1971ல் சோசலிஸ்ட், ஸ்தாபன காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்தன. ஆனால் அவரை தோற்கடிக்க முடியவில்லை.
அந்த கூட்டணி கட்சிகள் இணைந்து 1977 ல் ஜனதா கட்சி எனும் பெயரில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. மக்கள் மனமாற்றத்தால் தான் அப்போது காங்கிரஸை தோற்கடிக்க முடிந்தது. அதுபோல் இன்றைக்கு தி.மு.க., அரசை நீக்க மக்கள் முடிவு செய்து விட்டனர்.
ஹிந்து விரோத அரசை நீக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே வந்ததால் தான் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றி அடைந்தது.
தி.மு.க., முருகனை கையில் எடுத்தது எங்களின் வெற்றி. ஹிந்து கடவுளை எதிர்த்த தி.முக.,வினர், தற்போது நாங்களும் ஹிந்து என்று சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கோவில் நிலம்
தமிழகத்தில் 4 லட்சத்து 78 ஆயிரத்து 521 ஏக்கர் நிலம் கோவிலுக்கு சொந்தமாக உள்ளது. தி.மு.க., ஆட்சியில் பல்வேறு கோவில் நிலங்கள் மீட்கப்பட்டதாக கூறுகின்றனர். அப்படி என்றால் ஆக்கிரமிக்க அனுமதி கொடுத்தது யார்.
கோவில் நிலங்களை 5 ஆண்டுகளுக்கு மேல் குத்தகைக்கு விட முடியாது. ஏற்கனவே குத்தகைக்கு விடப்பட்ட நிலங்களை வாங்கிவிட்டு கோவில் நிலங்களை மீட்டதாக பரப்புகின்றனர்.
திருவண்ணாமலை கோவில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள விடுதி, தமிழ்நாடு ஓட்டலுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
முன்னதாக ரூ.600 என இருந்த வாடகை கட்டணம் தற்போது ரூ.1,200 ஆக உயர்ந்துள்ளது. இதுபோன்று கோவில் நகரங்களில் உள்ள தங்கும் விடுதிகள் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது.
ரூ.300 கோடி
மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு மோசடியில் மண்டல தலைவரை நீக்குவதை தவிர்த்து மேயர், துணை மேயரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். கும்பகோணம் மாநகராட்சியில் ரூ.300 கோடி ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. தி.மு.க., ஆட்சி என்றால் ஊழல் எனும் நிலை உள்ளது.
இவ்வாறு ராஜா கூறினார்.

