ஆரம்ப சுகாதார நிலையங்களில் சீனியர் மருத்துவர்களுக்கு 24 மணிநேரமும் பணி; மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
ஆரம்ப சுகாதார நிலையங்களில் சீனியர் மருத்துவர்களுக்கு 24 மணிநேரமும் பணி; மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
ADDED : பிப் 20, 2025 02:30 PM

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணிநேரமும் சீனியர் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு திருவண்ணாமலையைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியால், மாம்பாக்கம் அரசு சகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. அதன்பிறகு, அவரை ஆரணி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது, அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பான வழக்கை மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. வழக்கை விசாரித்து நீதிபதி, உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டை 4 வாரங்களுக்குள் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் சீனியர் மருத்துவர்களை 24 மணிநேரமும் பணியமர்த்த வேண்டும். இரு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இடையே 108 ஆம்புலன்ஸ் தயாராக இருக்க வேண்டும். ஆரம் சுகாதார நிலையங்களில் இருக்கும் மருத்துவ சேவைகள் குறித்து, அடிக்கடி பொது சுகாதாரத்துறை இயக்குநர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும், என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.