சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் டாக்டர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் டாக்டர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
ADDED : ஜூலை 29, 2025 07:30 AM
சென்னை : 'ஆரம்ப சுகாதார நிலையங்களில், 24 மணி நேரமும், டாக்டர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்' என, தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உ த்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், புதுப்பாக்கத்தை சேர்ந்த தேவமணி, ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:
கடந்த 2021ல், கர்ப்பிணியான என் மகள் சுப்புலட்சுமியை, முருகேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தேன். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின்போது, என் மகளுக்கு ரத்தப்போக்கு அதிகமானது.
இதனால், பெரிய மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரை செய்தனர். ஆம்புலன்ஸில் என் மகளை ஏற்றியபோது, செவிலியர்கள் மனிதாபிமானம் இன்றி நடந்து கொண்டனர்.
ரத்த கறையை துடைத்த பிறகே செல்ல முடியும் என நிர்ப்பந்தித்தனர். இதனால், 8 மாத குழந்தை கருவிலேயே இறந்தது. என் மகளுக்கு உடல், மன அளவில், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை விசாரித்த ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவு:
ஆணையத்தின் உத்தரவுபடி இந்த வழக்கை விசாரித்து, பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்தார். இந்த அறிக்கை திருப்திகரமாக இல்லாததால், அனைத்து தரப்பினரும் விசாரிக்கப்பட்டனர்.
அப்போது, ரத்த கறையை சுத்தம் செய்ய சொன்னது, முத்துலட்சுமி என்பவர் என்பது தெரிந்தது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சுப்புலட்சுமி கூறிய தகவல்கள், விசாரணை அறிக்கையில் இடம்பெறவில்லை.
குழந்தையை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்காக, மனுதாரருக்கு நான்கு வாரங்களுக்குள், தமிழக அரசு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
கிராம அளவில் உள்ள, ஆரம்ப சுகாதார நிலையத்தில், 24 மணி நேரமும், பணியில் இருக்கும் வகையில், போதிய அளவில், டாக்டர், செவிலியர், மருத்துவ பணியா ளர்களை, தமிழக அரசு நியமிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.