அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மீதான ஆள்கடத்தல் வழக்கு விசாரணைக்கு தடை
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மீதான ஆள்கடத்தல் வழக்கு விசாரணைக்கு தடை
ADDED : நவ 06, 2025 10:30 PM
சென்னை:சாத்துார் தொகுதி, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜவர்மன் மீதான ஆள்கடத்தல் வழக்கு விசாரணைக்கு, இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சக்தி நகரை சேர்ந்தவர் கம்மாபட்டி ரவிச்சந்திரன்.
இவர், 2018ல், சாத்துார் தொகுதி, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜவர்மன், அ.தி.மு.க., நிர்வாகிகள் தங்கமுனியசாமி, நரிக்குடியை சேர்ந்த ஐ.ரவிச்சந்திரன் ஆகியோருடன் சேர்ந்து, வேண்டுராயபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையை விலைக்கு வாங்கி நடத்தி வந்தார்.
கடந்த, 2019 செப்டம்பரில் ராஜவர்மன் உள்ளிட்ட மூன்று பேரும், தங்களது பங்குத் தொகையை பெற்றுக்கொண்டு, தொழிலில் இருந்து விலகினர்.
இந்நிலையில், 2019 அக்டோபரில் தொழில் அதிபர் ரவிச்சந்திரனை கடத்தி, ராஜவர்மன் உள்ளிட்டோர் இரண்டு கோடி ரூபாய் கேட்டு மிரட்டினர்.
இச்சம்பவம் குறித்த புகாரை, நீதிமன்ற உத்தரவின்படி விசாரித்த ஸ்ரீவில்லிபுத்துார் போலீசார், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜவர்மன் உட்பட ஆறு பேருக்கு எதிராக, ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட ஆறு பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்ற வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு பிப்ரவரியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி, ராஜவர்மன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை ரத்து செய்து, வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜவர்மன் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனு தாரர் ராஜவர்மன் தரப்பில், 'மூன்று ஆண்டுகள் தாமதமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளன' என, தெரிவிக்கப்பட்டது.
அப்போது, வழக்கில் இருந்து மனுதாரரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து, புகார்தாரர் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவுக்கு பதில் அளிக்க, காவல்துறை மற்றும் ராஜவர்மனுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும், 27ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதுவரை, ஸ்ரீவில்லிபுத்துார் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடையும் விதித்தார்.

