அரசு பள்ளிகளில் ரசீது இன்றி வினாத்தாள் கட்டணம் வசூல்: ஆசிரியர் சங்கம் புகார் ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
அரசு பள்ளிகளில் ரசீது இன்றி வினாத்தாள் கட்டணம் வசூல்: ஆசிரியர் சங்கம் புகார் ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
ADDED : நவ 06, 2025 10:34 PM
அரசு உயர்நிலை,- மேல்நிலை பள்ளிகளில், மாணவர்களிடமிருந்து ரசீது இல்லாமல் வசூல் செய்யப்பட்டு வரும் வினாத்தாள் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் மலைக்கொழுந்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
பள்ளிக்கல்வி துறை சார்பில், மாணவ, மாணவியருக்கு ஏராளமான நலத்திட்டங்களை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வி துறை வழிகாட்டுதலின்படி, அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு என, 50 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
இந்த தொகைக்கு முறையான ரசீதும் வழங்கப்படுகிறது. ஆனால், அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், வினாத்தாள் கட்டணம் என்ற பெயரில், மாணவ, மாணவியரிடம் பணம் வசூல் செய்யப்படுகிறது. இதற்கு முறையான அரசாணையோ, செயல்முறைகளோ இருப்பதாக தெரியவில்லை.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் வாய்மொழி உத்தரவுக்கு ஏற்ப, பள்ளி தலைமை ஆசிரியர்களால், மாணவர்களிடமிருந்து, 6, 7, 8ம் வகுப்புகளுக்கு, 80 ரூபாய், 9, 10ம் வகுப்புகளுக்கு, 100 ரூபாய், பிளஸ் 1, 2 வகுப்புகளுக்கு, 120 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இந்த தொகையானது, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதற்கென உள்ள ஒருங்கிணைப்பாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு வசூல் செய்யப்படும் பணத்திற்கு, பெற்றோருக்கு முறையான ரசீது எதுவும் கொடுப்பதில்லை.
மேலும் தொடக்கக்கல்வி துறையில் 6, 7, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடமிருந்து, வினாத்தாள் கட்டணம் என்ற பெயரில் எந்த கட்டணமும் வசூல் செய்யப்படுவதில்லை.
உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களிடம் மட்டும் வசூல் செய்யும் போது பெற்றோருக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இதனால், பள்ளிகளில் ஆசிரியர்களிடம் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். உடனடியாக வினாத்தாள் கட்டணத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
- நமது நிருபர் - '

