ஆள் கடத்தல் வழக்கு: பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை
ஆள் கடத்தல் வழக்கு: பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை
ADDED : ஜூன் 30, 2025 02:10 PM

புதுடில்லி: ஆள் கடத்தல் வழக்கில், எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காதல் திருமணம் செய்து கொண்ட அந்த இளம்பெண்ணை மீட்பதற்காக, காதலனின் தம்பியான 17 வயது சிறுவனை கடத்திய வழக்கில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் புதிய பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான பூவை ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை நடத்த அவரது வீட்டிற்கு, திருவள்ளூர் எஸ்.பி., தலைமையிலான போலீசார் சென்றனர். அப்போது, பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாகிவிட்டதாகவும், தொடர்ந்து அவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனிடையே, இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் தலைமறைவாக உள்ள ஜெகன்மூர்த்தியை கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று (ஜூன் 30) உச்சநீதிமன்றத்தில் நீதிபதி மனோஜ் மிஸ்ரா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு, விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெகன்மூர்த்திக்கு நீதிபதிகள் முன் ஜாமின் வழங்கினர்.
அதுமட்டுமின்றி ஆள் கடத்தல் வழக்கில் ஜெகன்மூர்த்தியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. பிணைத்தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.