போதைப்பொருள் வழக்கு ஜான் கூட்டாளியை பிடிக்க கேரளாவில் வேட்டை
போதைப்பொருள் வழக்கு ஜான் கூட்டாளியை பிடிக்க கேரளாவில் வேட்டை
ADDED : ஜூலை 07, 2025 03:11 AM
சென்னை: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த ஜானின் கூட்டாளி, கேரளாவில் பதுங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளதால், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவான,  என்.சி.பி., அதிகாரிகள், அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
சென்னையில் நடிகர், நடிகையருக்கு கோகைன் எனப்படும் போதைப்பொருள் சப்ளை செய்த, கானா நாட்டை சேர்ந்த ஜான், 38, சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
இவர், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர். இவரது கூட்டாளி கேரளாவில் பதுங்கி இருப்பதாக, என்.சி.பி., அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, அந்த அதிகாரிகள் கூறியதாவது:
ஜான் மற்றும் அவரது கூட்டாளிகள், ஆப்கானிஸ்தானில் இருந்து கோகைன், மெத்ஆம்பெட்டமைன் போன்ற போதைப்பொருட்களை கடத்தி வந்து, தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு சப்ளை செய்துள்ளனர்.
துவக்கத்தில் மென்பொருள் நிறுவன ஊழியர்களை குறிவைத்து, போதைப் பொருள் விற்று வந்தனர். அதன்பின் தொழில் அதிபர்கள்,  நடிகர், நடிகையரை வாடிக்கையாளராக மாற்றினர்.
கோகைன் உள்ளிட்ட போதைப்பொருளை நேரடியாக விற்பனை செய்யாமல், தங்கள் வாடிக்கையாளர்களிடம், 100க்கு, 10 ரூபாய் கமிஷன் தருவதாகக் கூறி, இடைத்தரகர்களாக மாற்றுவர்.
அந்த வகையில் தான், பெங்களூரில் மென்பொருள் நிறுவன ஊழியராக வேலை செய்து வந்த, சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமாரை, தங்கள் வலையில் வீழ்த்தி உள்ளனர்.
பிரதீப்குமார் வாயிலாக, சென்னையில் நவீன பார்கள், பப் மற்றும் பண்ணை வீடுகளில் நடக்கும் இரவு நேர பார்ட்டிகளுக்கு, போதைப் பொருள் சப்ளை செய்து உள்ளனர்.
ஜான் கைதாகி உள்ள நிலையில், அவரது கூட்டாளி கேரளாவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அதனால், தேடுதல் வேட்டை நடக்கிறது; விரைவில் சிக்குவார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

