பிரிந்து வாழ்ந்து வந்த மனைவி கத்தியால் குத்திக்கொலை; கணவன் கைது
பிரிந்து வாழ்ந்து வந்த மனைவி கத்தியால் குத்திக்கொலை; கணவன் கைது
UPDATED : அக் 09, 2025 10:45 AM
ADDED : அக் 09, 2025 10:40 AM

பொள்ளாச்சி: கோவையை அடுத்த பொள்ளாச்சியில் பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவத்தில், கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சி மரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (27). இவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஸ்வேதா (26). சில ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஸ்வேதா கடந்த ஓராண்டாக பழனியப்பன் வீதியில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் பாரதி இன்று காலை 9 மணியளவில் ஸ்வேதா தங்கி இருந்த வீட்டின் அருகே மறைந்து இருந்துள்ளார். அப்போது, ஸ்வேதா வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்த போது, அவருடன் பாரதி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், பாரதி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்வேதாவின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள், அதிர்ச்சி அடைந்து பாரதியை சுற்றி வளைத்து பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.