ADDED : ஜூன் 10, 2025 06:45 AM

தல்லாக்குளம் : மதுரை மாவட்டம், கோரிப்பாளையத்தை சேர்ந்தவர் ராமரத்தினம், 60; பிளம்பர்; இவரது மனைவி மீனலோச்சினி, 55; மகன், மகள் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். ராமரத்தினம் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்தார். ஆறு மாதங்களுக்கு முன், தல்லாகுளம் போலீசில் மீனலோச்சினி புகாரில், ராமரத்தினத்தை போலீசார் கண்டித்து அனுப்பினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், வீட்டில் மீனலோச்சினி வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாக ராமரத்தினம் தெரிவித்தார். மகன், மகள் குடும்பத்துடன் வந்தனர். மீனலோச்சினி உடல் அருகே உடைக்கப்பட்ட தேங்காயை வைத்து ராமரத்தினம் சோகத்துடன் இருந்தார்.
இதுகுறித்து, ராமரத்தினத்திடம் கேட்டபோது, அவர் மழுப்பியுள்ளார். இறப்பில் சந்தேகம் இருப்பதாக மகன் பிரபாகரன் தல்லாக்குளம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், மீனலோச்சினி தலையில் வெட்டப்பட்டு இறந்தது உறுதியானது.கொலையை மறைக்க, மனைவி வழுக்கி விழுந்தது போல், 'செட்டப்' செய்து, ராமரத்தினம் நாடகமாடியது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

