ஜீவனாம்ச வழக்கில் ரூ. 80,000 க்கு சில்லறையாக கொடுத்த கணவன்!
ஜீவனாம்ச வழக்கில் ரூ. 80,000 க்கு சில்லறையாக கொடுத்த கணவன்!
ADDED : டிச 19, 2024 04:10 PM

கோவை:ஜீவனாம்ச வழக்கில், 80,000 ரூபாய்க்கு கோர்ட்டில் சில்லறை காசுகளாக கொடுத்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்றம் வாங்க மறுத்ததால் இன்று நோட்டுகளாக ஒப்படைத்தார்.
கோவை, வடவள்ளி பகுதியை சேர்ந்த தம்பதி, குடும்ப பிரச்னை காரணமாக விவாகரத்து கோரி, கோவை கூடுதல் குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், கணவன் தரப்பிலிருந்து இடைக்கால ஜீவனாசம் வழங்க கோரி அதே நீதிமன்றதில் மனைவி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இரண்டு லட்சம் ரூபாய் இடைக்கால ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டு இருந்தது.
முதற்கட்டமாக, 80,000 ரூபாய் கோர்ட்டில் செலுத்த கணவர் வந்தார். அப்போது, ரூபாய் நோட்டு கட்டிற்கு பதிலாக, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை, 80,000 ரூபாய்க்கு சேகரித்து, அவற்றை, 20 சாக்குபையில் போட்டு நேற்று கோர்ட்டில் ஒப்படைத்தார். கோர்ட்டிற்கு சாக்கு பையுடன் வந்த நபரை கண்டு, வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர். இதை பார்த்த நீதிபதி கஜரா ஆர். ஜிஜி , சில்லறை காசுக்கு பதிலாக, ரூபாய் நோட்டுகளாக ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து சில்லறை காசுகளை திரும்பவும் எடுத்து சென்ற அந்த நபர், இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜராகி, 500 ரூபாய் நோட்டுகளாக சேர்த்து, 80,000 ரூபாயை ஒப்படைத்தார்.

