ADDED : ஆக 08, 2025 02:36 AM

பண்ருட்டி: பண்ருட்டி அருகே குடும்பத் தகராறில் மனைவி தாக்கியதில், கணவர் உயிரிழந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த தாழம்பட்டு, கிழக்கு தெருவை சேர்ந்தவர் செல்வமணி, 50; வடலுாரில் சைக்கிள் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி உஷா,45; ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். வடலுாரில் செல்வமணிக்கு வேறோரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை, மனைவி உஷா கண்டித்ததால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, உஷா, செல்வமணியை தாக்கினார்.
இதில், சுவற்றில் மோதி பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்தலேயே இறந்தார்.
இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். தகவலறிந்த காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வமணி உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து வி.ஏ.ஒ.,பூவராகவன் அளித்த புகாரின் பேரில், போலீசார், உஷாவிடம் விசாரணை நடத்தினர்.
இதில், செல்வமணி குடிபோதையில், உஷாவையும், மகனையும் தாக்கினார். ஆத்திரமடைந்த உஷா, செல்வமணியை கட்டையால் தாக்கி தள்ளி விட்டதில், சுவற்றில் மோதி காயமடைந்து இறந்தது தெரிந்தது.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து உஷாவை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

