நான் மன்னிப்பு கேட்கவில்லை என் விளக்கத்தை கமிஷன் ஏற்றது போலீஸ் கமிஷனர் அருண் தகவல்
நான் மன்னிப்பு கேட்கவில்லை என் விளக்கத்தை கமிஷன் ஏற்றது போலீஸ் கமிஷனர் அருண் தகவல்
ADDED : அக் 19, 2024 12:29 AM
சென்னை:“நான் மன்னிப்பு கேட்கவில்லை. என் விளக்கத்தை ஏற்று, மாநில மனித உரிமைகள் கமிஷன், வழக்கில் இருந்து என்னை விடுவித்துள்ளது,” என, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்தார்.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக, ஜூலை 8ல் பொறுப்பேற்றதும், செய்தியாளர்களுக்கு அருண் பேட்டி அளித்தார்.
அப்போது, 'ரவுடிகளை ஒழிக்க, என்கவுன்டர் செய்யப்படுமா' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், 'என்கவுன்டர் என்பதெல்லாம் கிடையாது. ரவுடிகளுக்கு புரியும் மொழியில் சொல்லி கொடுக்கப்படும்' என்று, பதில் அளித்தார்.
'சம்மன்'
அதன்பின், திருவொற்றியூர் உதவி கமிஷனர் இளங்கோவன், ரவுடி ஒருவரின் வீட்டிற்கு சென்று, அவரது மனைவியிடம், 'உங்கள் கணவர் ஒழுங்காக இருக்க வேண்டும். நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.
'கத்தியை எடுத்து ஏதேனும் கொலை வழக்கில் சிக்கினால், என்கவுன்டர் தான்' என, மிரட்டும் தொணியில் எச்சரித்தார். இது தொடர்பான வீடியோ வெளியானது.
உடன், மாநில மனித உரிமைகள் கமிஷன் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. போலீஸ் கமிஷனர் அருண் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என, 'சம்மன்' அனுப்பியது. அதன்படி கமிஷனில், கமிஷனர் அருண் சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன் நேற்று முன்தினம் ஆஜரானார்.
அவர் வாதாடியதாவது:
சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக அருண் பொறுப்பேற்ற பின், ரவுடியிசம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
போலீஸ் கமிஷனர், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை அமைப்பின் மீது உறுதியான நம்பிக்கை உடையவர். சட்டம் - ஒழுங்கு பராமரிப்பில் காவல் துறை அதிகாரிகளின் கடமை மற்றும் பொறுப்புகளை நன்கு உணர்ந்தவர்.
வேறு அர்த்தம்
செய்தியாளர் சந்திப்பின் போது, குற்றங்களின் விளைவுகள், அது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவது குறித்து பேசினார். அவரது பேச்சுக்கு வேறு அர்த்தம் கற்பிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் வாதாடினார்.
அவரது வாதத்தை ஏற்ற மாநில மனித உரிமைகள் கமிஷன், வழக்கில் இருந்து கமிஷனர் அருணை விடுவித்தது.
இந்நிலையில், கமிஷனர் அருண் சார்பில் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அவர் மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியானது.
அதை மறுத்துள்ள அருண், “மாநில மனித உரிமைகள் கமிஷனில், என் பேச்சுக்கு உரிய விளக்கம் அளித்து மனு கொடுக்கப்பட்டது. அதை கமிஷன் ஏற்றுக் கொண்டு, என்னை வழக்கில் இருந்து விடுவித்தது,” என்றார்.