ஸ்டாலினைப் போல அரசியல் ஞானம் எனக்கு இல்லையே; ராமதாஸ் கிண்டல்
ஸ்டாலினைப் போல அரசியல் ஞானம் எனக்கு இல்லையே; ராமதாஸ் கிண்டல்
ADDED : நவ 27, 2024 10:28 PM

சென்னை: தனக்கு வேறு வேலை இல்லாததால் அறிக்கை விட்டு அரசை விமர்சிப்பதாக கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பதிலளித்துள்ளார்.
'அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள விவகாரத்தில், தமிழக மின்வாரியத்தின் பெயரும் இருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்' என்று, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், 'ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. தினமும் அறிக்கை வெளியிடுகிறார். அதற்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை' என்றார்.இது, பா.ம.க.,வில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 'முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையேல், பா.ம.க., தொண்டர்கள் உணர்ச்சிவசப்படுவதை தடுக்க முடியாது' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் தமிழிசை, நா.த.க., தலைவர் சீமான், த.மா.கா., தலைவர் வாசன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, தமிழகம் முழுதும் பா.ம.க., தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் விமர்சனம் குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், ' அவரைப் போல பிரகாச அரசியல் ஞான ஒளி எனக்கு இல்லை தான். நான் என்ன செய்ய முடியும், எனக்கு வருத்தமாக இருக்கிறது,' எனக் கூறினார்.