4வது முறை ஆட்சியைப் பிடிப்போமா தெரியாது... ஆனால், இது மட்டும் நடக்கும்; நிதின் கட்கரி கிண்டல்
4வது முறை ஆட்சியைப் பிடிப்போமா தெரியாது... ஆனால், இது மட்டும் நடக்கும்; நிதின் கட்கரி கிண்டல்
UPDATED : செப் 23, 2024 02:05 PM
ADDED : செப் 23, 2024 01:58 PM

நாக்பூர்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலேவை கிண்டல் செய்யும் விதமாக, சக அமைச்சர் நிதின் கட்கரி பேசியது அங்கு சிரிப்பலையை ஏற்படுத்தியது.
288 தொகுதிகளைக் கொண்ட மஹாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அனைத்து அரசியல் கட்சிகளும், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளன. ஆளும் மஹாயுதி கூட்டணியில் பா.ஜ., முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசிய காங்கிரஸ் கட்சி மற்றும் அதாவலேவின் இந்திய குடியரசு கட்சி இடம்பெற்றுள்ளன.
எதிர்வரும் தேர்தலில் இந்தக் கூட்டணி மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்த சூழலில், நேற்று நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராம்தாஸ் அதாவலே, 10 முதல் 12 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் விருப்பமான தொகுதிகளின் பட்டியலை கூட்டணியிடம் கொடுப்போம் எனக் கூறினார்.
இந்த நிலையில், நேற்று மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரியும், ராம்விலாஸ் அதாவலேவும் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது, மேடையில் பேசிய நிதின் கட்கரி, 4வது முறையாக பா.ஜ., ஆட்சிக்கு வருமா? என்பது பற்றி தனக்கு தெரியாது என்றும், ஆனால், ராம்விலாஸ் அதாவலே அமைச்சராவது மட்டும் உறுதி என்று நகைச்சுவையாக பேசினார். அவரது இந்தப் பேச்சைக் கேட்டு அங்கிருந்தவர்கள் கலகலவென சிரித்தனர்.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அமைச்சரவையில் ராம்விலாஸ் அதாவலே, தொடர்ந்து 3 முறை இடம்பிடித்திருந்தார். அதற்கு முன் அவர் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.