ADDED : மார் 14, 2025 12:41 AM
ரூபாய் சின்னத்தை வடிவமைத்த உதயகுமார் பேட்டி: அசாமின் குவஹாத்தியில் உள்ள ஐ.ஐ.டி.,யில் பேராசிரியராக பணியாற்றும் டி.உதயகுமார் கூறியுள்ளதாவது:
என்னுடைய தந்தை, 1971ல் தமிழகத்தின் ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருந்தார். அவர் தற்போது சொந்த கிராமத்தில், தன் வாழ்க்கையை அமைதியாக கழித்து வருகிறார். நான் பிறப்பதற்கு முன்பே அவர் எம்.எல்.ஏ.,வாக இருந்தார். அதனால், தற்போது தி.மு.க., அரசு, ரூபாய் சின்னத்துக்கு மாற்றாக 'ரூ' சின்னத்தை பயன்படுத்துவதும், என் தந்தை தி.மு.க.,வில் இருந்ததும் எதேச்சையானது.
அதுபோல நான் நம் நாட்டின் ரூபாய்க்கான சின்னத்தை நான் வடிவமைத்ததும் எதேச்சையாக அமைந்தது. தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வின் மகன் என்பதற்காக அந்த சின்னம் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தமிழக அரசின் தற்போதைய முடிவு குறித்து, எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை. எந்த சிக்கலிலும் மாட்டுவதற்கு தயாராக இல்லை. ஒருவேளை சின்னத்தில் மாற்றம் வேண்டும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். இது முழுக்க முழுக்க அரசின் முடிவு. அதில் எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.