'பெயர், புகழ், அனைத்தும் சினிமாவில் தான் கிடைத்தது'
'பெயர், புகழ், அனைத்தும் சினிமாவில் தான் கிடைத்தது'
ADDED : பிப் 13, 2025 11:48 PM
சென்னை:பாடல்களின் பதிப்புரிமை தொடர்பான வழக்கில், சாட்சி விசாரணைக்காக, 'மாஸ்டர்' நீதிமன்றத்தில் ஆஜரான இசையமைப்பாளர் இளையராஜா, “பெயர், புகழ் மற்றும் செல்வம் என அனைத்தும், சினிமா வாயிலாகவே கிடைத்தது,” என்று கூறினார்.
இளையராஜா இசையமைத்த 100க்கும் மேற்பட்ட படங்களின் இசை வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும், 'மியூசிக் மாஸ்டர் ஆடியோ வீடியோ' என்ற நிறுவனம், சமூக வலைதளங்களில் தங்கள் அனுமதியின்றி பாடல்களை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2010ல் வழக்கு தொடர்ந்தது.
நிலுவையில் உள்ள இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சாட்சி விசாரணைக்காக மாஸ்டர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. அப்போது, இளையராஜா ஆஜராகி சாட்சியம் அளிக்க உத்தரவிட்டுஇருந்தது.
அதன்படி சாட்சியம் அளிக்க, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, இரண்டாவது மாஸ்டர் நீதிமன்றத்தில், இளையராஜா நேற்று காலை ஆஜரானார். மாஸ்டர் மியூசிக் நிறுவனம் தரப்பில், மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன், அவரிடம் குறுக்கு விசாரணை செய்தார். அதற்கு சாட்சி கூண்டில் ஏறி, இளையராஜா பதிலளித்தார்.
ஒரு மணி நேரமாக நடந்த சாட்சி விசாரணையின் போது, இளையராஜாவிடம் பாடல்களின் பதிப்புரிமை, தயாரிப்பாளர்கள் உடனான ஒப்பந்தம், சொத்து மதிப்பு ஆகியவை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. “எனக்கு எதுவும் தெரியாது. என்னை இசைக்கு முழுமையாக அர்ப்பணித்ததால், உலகளாவிய விஷயங்களில் கவனம் செலுத்தவில்லை. பெயர், புகழ் மற்றும் செல்வம் அனைத்தும் சினிமா வாயிலாகவே கிடைத்தது,” என இளையராஜா பதிலளித்தார்.
ஒரு மணி நேரம் வரை, இளையராஜாவிடம் நடந்த சாட்சி விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து, மீண்டும் வழக்கு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.