'கதவை சாத்தி விட்டேன்': கூட்டணி குறித்து திருமாவளவன்
'கதவை சாத்தி விட்டேன்': கூட்டணி குறித்து திருமாவளவன்
ADDED : ஏப் 28, 2025 05:44 AM

புதுச்சேரி திருபுவனையில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசியதாவது:
நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த வேங்கைவயல் சம்பவம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள், மேல்பாதி பிரச்னை உள்ளிட்ட எத்தனையோ பிரச்னைகள் குறித்து வி.சி.,க்கள் பேசியுள்ளனர்; போராடி உள்ளனர்.
ஆளுங்கட்சிக்கு கூட்டணி கட்சியாக இருந்தாலும், மக்கள் பிரச்னைக்காக குரல் எழுப்பி உள்ளோம். ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க., இந்தப் பிரச்னைகளுக்காக போராடாதது ஏன்?
கூட்டணிக்காக எல்லா கதவுகளையும் திறந்து வைத்துக்கொண்டு, யாருக்காகவும் வி.சி., காத்திருக்கவில்லை. பா.ஜ., - அ.தி.மு.க., உள்ளிட்ட பல கட்சிகளோடும் கூட்டணி பேசும் ராஜதந்திரம், வி.சி.,க்கு தெரியாது; தேவையும் இல்லை. பா.ஜ., மற்றும் பா.ம.க., இடம்பெறும் அணியில் வி.சி., இடம்பெறாது.
நடிகர் விஜயை வைத்து அம்பேத்கர் புத்தகம் வெளியிட்டனர். அந்த விழாவுக்கு வருமாறு என்னையும் அழைத்தனர்.
நான் அந்த விழாவில் பங்கேற்றால், வி.சி., இடம்பெறும் ஆளுங்கட்சி கூட்டணியில் குழப்பம் வரும் என்பது மட்டுமல்ல; அது பா.ஜ.,வுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதால், அந்நிகழ்ச்சியை நான் புறக்கணித்தேன்; விழாவுக்கு செல்லவில்லை.
த.வெ.க.,வுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு வி.சி.,க்களுக்கு இருந்தது. ஆனால், நான்தான் கதவை அடைத்தேன்.
நம் பக்கம், வி.சி.,க்கள் வர மாட்டார்களா என கதவுகளை திறந்து வைத்து, அ.தி.மு.க., காத்திருந்தது. துணை முதல்வர் பதவி தருகிறோம்; ஐந்து அமைச்சர்கள் தருகிறோம் என்றெல்லாம் பேரம் பேசினர்.
எல்லாரும் நினைப்பது போன்ற சராசரி அரசியல்வாதி அல்ல திருமாவளவன். இப்படிபட்ட ஆசைகளால், திருமாவளவனை வீழ்த்தி விடலாம் என யாரும் நினைத்தால், தோல்வி தான் கிடைக்கும். யாரும் என்னை வீழ்த்த முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
- நமது நிருபர் -

