'நான் சொல்வதற்கு எதுவும் இல்லை' விரக்தியில் ராமதாஸ்
'நான் சொல்வதற்கு எதுவும் இல்லை' விரக்தியில் ராமதாஸ்
ADDED : ஆக 10, 2025 06:23 AM

திண்டிவனம்: 'நான் சொல்வதற்கு எதுவும் இல்லை' என, அன்புமணி கூட்டிய பொதுக்குழு பற்றி, ராமதாஸ் ஒரே வரியில் பதில் கூறினார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையே ஏற்பட்ட மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. வரும் 17ல் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என ராமதாஸ் அறிவித்த நிலையில், அதற்கு போட்டியாக அன்புமணி நேற்று மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தினார்.
இந்நிலையில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை சந்தித்து விட்டு வந்த பொதுச்செயலர் முரளி சங்கர் அளித்த பேட்டி:
அன்புமணியின் பொதுக்குழுவை நடத்தலாம் என்று நீதிமன்றம் அனுமதி தரவில்லை; தடை என்றும் சொல்லவில்லை. இது அதிகார பிரச்னை என்பதால், உரிமையியல் நீதி மன்றம் சென்று தீர்வு காண வேண்டும் என நீதிமன்றம் கூறியிருக்கிறது.
அன்புமணி தலைவராக நீடிக்கலாமா, வேண்டாமா என்ற சர்ச்சை தேவையில்லை. அவர் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில், வெறும் ஒரு சேர் போட்டு, வெள்ளைத்துண்டு போட்டு காண்பித்து, ராமதாஸ் வரவில்லை என கூறுவது சரியல்ல.
அன்புமணி நேரடியாக தோட்டத்திற்கு வந்து ராமதாசை சந்தித்து, பொதுக்குழு கூட்டம் சம்பந்தமாக பேசியிருக்க வேண்டும். ராமதாசை, அன்புமணி சந்திக்காதது தான் அனைத்து பிரச்னை களுக்கும் காரணம்.
நீதிமன்றத்தில் தீர்ப்பு உத்தரவை வாங்குவதற்கு வழக்கறிஞர் பாலுவும், மற்ற வழக்கறிஞர்களும் காட்டிய அக்கறையை, ராமதாஸ் - அன்புமணி இருவரையும் ஒன்று சேர்த்து வைக்க காட்டியிருந்தால், ராமதாஸ் தற்போது ஓய்வில் இருந்திருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின், ராமதாஸ் கூறுகையில், ''அன்புமணி கூட்டிய பொதுக்குழு குறித்து, நான் சொல்வதற்கு எதுவும் இல்லை,'' என்றார்.