பெண்கள் அச்சமில்லாமல் வாழ சத்தியம் செய்கிறேன்: முதல்வர்
பெண்கள் அச்சமில்லாமல் வாழ சத்தியம் செய்கிறேன்: முதல்வர்
UPDATED : ஜன 28, 2026 04:03 AM
ADDED : ஜன 28, 2026 04:01 AM

சென்னை: ''தமிழகத்தில் பெண்கள் அச்சமில்லாமல் வாழ உரிய கட்டமைப்பை உருவாக்க சத்தியம் செய்கிறேன்,'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின், இரண்டு நாள் உலக மகளிர் உச்சி மாநாட்டை, சென்னையில் நேற்று, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
உலக வங்கியின், 1,185 கோடி ரூபாய் நிதியுதவியுடன், 5,000 கோடி ரூபாய் மதிப்பில், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக, 185 கோடி ரூபாயை, உலக வங்கி மண்டல இயக்குநர் செம் மெட்டே, தமிழக அரசிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
இந்தியாவிலேயே, பெண்கள் அதிகளவில் வேலைக்கு செல்லும் மாநிலமாக தமிழகம் உள்ளது. புதிதாக எந்த நிறுவனம் தமிழகத்தில் தொழில் துவக்க முன்வந்தாலும், இதன் வாயிலாக பெண்கள் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் என்பது தான், என் முதல் கேள்வியாக இருக்கும்.
இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் கருத்துகளும், அதனால் உருவாகும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளும் நம்முடைய இலக்கை அடைய துணை நிற்கும். பெண்கள் தான், சமூகத்தின் முதுகெலும்பு, மக்கள்தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்கள் முன்னேறாமல், எந்த நாடும் வளர முடியாது.
பெண்கள் முன்னேற்றத்துக்காக தமிழகத்தில் அரசு சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மகளிர் உரிமை திட்டத்தின் வாயிலாக, 1.30 கோடி பேருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.
பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கியதால், இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக அளவிலான பெண்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர்.
தமிழகத்தில், ஒவ்வொரு பெண்ணும் கல்வி, சுதந்திரம், மரியாதை, ஊதியம் பெற்றிடவும், தொழில் முனைவோர்களாக மாறவும், பெண்கள் அச்சமில்லாமல் வாழ உரிய கட்டமைப்பை உருவாக்குவோம் என, சத்தியம் செய்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:
பிறக்கும் குழந்தைகள் துவங்கி, பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவியர், இல்லத்தரசிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என, அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பையும், வளர்ச்சியையும் உறுதி செய்கிறோம்.
தமிழ்நாடு என்றால் மகளிர் நாடு என்று சொல்லும் அளவிற்கு, ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

