ADDED : மார் 02, 2024 12:42 AM
சென்னை:''வரும் லோக்சபா தேர்தலில், கட்சி சொன்னால் போட்டியிடுவேன்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை அமைந்தகரையில் உள்ள பா.ஜ., தேர்தல் அலுவலகத்தில், தேர்தல் வாக்குறுதி கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. அதில், பா.ஜ., நிர்வாகிகளிடம், புதிய வாக்காளர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து மனுக்களை வழங்கினர்.
பின், அண்ணாமலை அளித்த பேட்டி:
நான், 39 தொகுதிகளையும் சமமாக பார்த்துத்தான் வேலை செய்தேன். தனிப்பட்ட விறுப்பு, வெறுப்பு ஏதும் இல்லை. கட்சி போட்டியிடச் சொன்னால் போட்டியிடுவேன்; தேர்தல் பணி செய் என்றால் அதைச் செய்வேன்; பிரசாரம் செய் என்றால் செய்வேன்.
நான் எதையும் கட்சியிடம் கேட்கவில்லை. அனைத்தையும் கட்சி முடிவு செய்யும். அடுத்த 60 நாட்களுக்கு, என்னை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது, கட்சி தலைமையின், குறிப்பாக பிரதமர் மோடியின் முடிவு.
தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்து விட்டது என்பது உண்மை. வரும் லோக்சபா தேர்தல் முடிவுகள், பா.ஜ., வளர்ச்சியை காட்டும். உதயநிதி, அவரின் அப்பா, தாத்தாவை வைத்து அரசியலுக்கு வந்து எம்.எல்.ஏ., - அமைச்சர் ஆனார்.
அவர்கள், இருவரும் இல்லை எனில் உதயநிதியால் இரண்டு ஓட்டுக்களை கூட வாங்க முடியாது. மோடியைப் பற்றி பேச உதயநிதிக்கு தகுதியில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

