தமிழ்த்தாய் வாழ்த்தையே முடக்குவேன்: சீமான் அதிரடி சபதம்
தமிழ்த்தாய் வாழ்த்தையே முடக்குவேன்: சீமான் அதிரடி சபதம்
ADDED : அக் 21, 2024 06:05 AM

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாமக்கல்லில் நேற்று அளித்த பேட்டி:
'திராவிட நல் நாடு' என்ற வார்த்தையை தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது விட்டு விட்டனர் என்பதற்காக, ஸ்டாலின் முதற்கொண்டு, அனைத்து கட்சியினரும் கொந்தளிக்கின்றனர்.
கோரிக்கையாலோ, வலியுறுத்தலாலோ திராவிட நாடு அமைத்துவிட முடியுமா? அப்படியொரு நாடு எங்கே இருக்கிறது என புரியும்படி யாராலும் சொல்ல முடியுமா? திராவிட நாட்டின் எல்லை எது என்றாவது சொல்வரா?
இலக்கியத்தில், வரலாற்றில் திராவிட நாடு என்பது எங்கு உள்ளது. தமிழனை ஏமாற்றி, தாங்கள் வசதியாக ஆள்வதற்கு திராவிட நாடு என சொல்கின்றனர்.
நான் உண்மையான தமிழன். அதனால் ஆட்சிக்கு வந்ததும், தமிழ்த்தாய் வாழ்த்தை முற்றிலும் முடக்குவேன். அதற்கு பதிலாக வேறு பாடல் கொண்டு வருவேன்.
அரசு நிகழ்ச்சிகளில் அதுவே பாடப்படும். திராவிடனுக்கென தனித்த அடையாளத்துடன் கூடிய மொழி என எதுவும் உண்டா? தமிழ்தான் எங்கள் மொழி. தமிழர்கள் என்பது இனத்தின் அடையாளம்.
தமிழ்த்தாய் வாழ்த்து தேவையில்லை; ஆட்சிக்கு வந்ததும் அதை முடக்குவேன் என, 2016 முதல் கூறி வருகிறேன். தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதிலாக, பாரதிதாசன் பாடலைக்கூட கொண்டு வருவேன்.
திராவிடம், திராவிடம் எனக்கூறி திட்டமிட்டு அனைவரையும் வீழ்த்துகின்றனர். ஆனால், கீழடி நாகரிகத்தை தமிழக நாகரிகம் என சொல்ல மறுக்கின்றனர். யார் திராவிடர் என்பது குறித்து விவாதிக்க, அமைச்சர் மகேஷ் தயாராக இருக்க வேண்டும்.
தனித்து நிற்க தி.மு.க.,வுக்கு தைரியமில்லை. நடிகர் விஜய் மற்றும் என்னை பார்த்து பயப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -