'ஆட்சியின் கள ஆய்வுக்கு பின் கட்சி பணியை ஆராய்வேன்'
'ஆட்சியின் கள ஆய்வுக்கு பின் கட்சி பணியை ஆராய்வேன்'
ADDED : அக் 26, 2024 07:38 AM
சென்னை : 'கள ஆய்வுப் பணிகளை, அந்தந்த மாவட்டங்களில் நிறைவு செய்தபின், கட்சிப் பணிகளையும் ஆய்வு செய்வேன்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க., தொண்டர்களுக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்:
பொதுவாழ்வில் விமர்சனங்கள் சர்வ சாதாரணம் தான் என்பதால், எதிர்தரப்பின் ஆதாரமற்ற விமர்சனங்களை கடந்து, மக்கள் நலப்பணிகளை திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது.
கடந்த 22ல், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நலத் திட்டங்களை துவக்கி வைத்தேன். புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நுாற்றாண்டு பஸ் நிலையத்தையும் திறந்து வைத்து பார்வையிட்டேன்.
பொம்மைக்குட்டைமேடில் நடந்த விழாவில், 16,031 பயனாளிகளுக்கு, 146 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
ஆதிதிராவிட மக்கள் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்தி, அவர்கள் அனைவரும் முன்னேறுவதற்கான சமூக நீதி திட்டங்களை நிறைவேற்றி வருவது தான் திராவிட மாடல் அரசு.
நான் துணை முதல்வராக இருந்தபோது, ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த அருந்ததியர் மக்களுக்கான, 3 சதவீதம் உள்ஒதுக்கீடு தீர்மானத்தை முன்மொழியும் வாய்ப்பை பெற்றேன்.
கடந்த 15 ஆண்டுகளில், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள், பல்வேறு நிலைகளில் முன்னேற்றம் கண்டிருப்பதை காணும்போது, உள் ஒதுக்கீடு தீர்மானத்தை நிறைவேற்றும் வாய்ப்பை பெற்றதை பெருமையாகக் கருதுகிறேன்.
முதல்வராக முதன்முறையாக நாமக்கல் சென்ற போது, அங்குள்ள அருந்ததியர் மக்களின் வசிப்பிடம் சென்று, அவர்களின் நலன்களை கேட்டறிந்தேன்.
அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டுக்கொண்டேன். அவற்றை நம் திராவிட மாடல் அரசு நிறைவேற்றித் தந்தமைக்கு, அவர்கள் என்னிடம் நன்றி தெரிவித்தனர்.
திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியை வழங்கினேன்.
திட்டங்கள் செயல்படுத்தும் முறையை கண்காணிப்பதற்காக, நவம்பர் முதல் மாவட்டந்தோறும் நேரில் களஆய்வு செய்ய இருக்கிறேன் என்று தெரிவித்தேன்.
இந்த அறிவிப்புக்கு பெரும் வரவேற்பை மக்கள் அளித்துள்ளனர். நவ., 5, 6ம் தேதிகளில் கோவைக்கு சென்று களஆய்வை துவங்க இருக்கிறேன். மற்ற மாவட்டங்களிலும் தொடர இருக்கிறேன்.
கள ஆய்வும் தொடரும்; திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்களும் தொடரும். களஆய்வு பணிகளை, அந்தந்த மாவட்டங்களில் நிறைவு செய்த பின், கட்சிப் பணிகளையும் ஆய்வு செய்வேன்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.