ADDED : நவ 25, 2025 04:43 AM

'மதுரையில் ஒத்தக்கடை முதல் திருப்பரங்குன்றம் வரை நிறைவேற்றப்பட இருந்த மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, மத்திய அரசு அனுமதி மறுத்திருக்கிறது. வரும் 2026ல் நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தல் வாயிலாக தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் தேர்வாவர். அவர்களோடு டில்லி சென்று, மத்திய அமைச்சர்கள், பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேசி, திட்டத்துக்கான அனுமதி பெற்றுத் தருவோம்; இது உறுதி' என, மதுரை திருப்பரங்குன்றத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
ஒரு கட்சிக்கு பலம், அனைத்து பூத்களுக்கும் கமிட்டி அமைப்பது. அந்த வகையில், தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் பூத் கமிட்டிகளை அமைத்துள்ளன. ஆண்ட, ஆளும் கட்சியாக இருப்போருக்கு இது பெரிய விஷயம் அல்ல. ஆனால், தே.மு.தி.க., போன்ற சிறிய கட்சிகள், தமிழகம் முழுதும் உள்ள 68,000 பூத்களுக்கும் ஆட்களை நியமித்தால், அது பெரிய விஷயம் தான். அந்தப் பணியை, தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு அடுத்தபடியாக செய்து முடித்திருக்கும் ஒரே கட்சி தே.மு.தி.க., தான்.
இவ்வாறு அவர் கூறினார்.

