தொலைத்து விடுவேன், சட்டையை கழற்றி விடுவேன்; எஸ்.ஐ.,யை மிரட்டிய அடாவடி தி.மு.க., நிர்வாகி
தொலைத்து விடுவேன், சட்டையை கழற்றி விடுவேன்; எஸ்.ஐ.,யை மிரட்டிய அடாவடி தி.மு.க., நிர்வாகி
UPDATED : ஜூலை 10, 2025 04:53 PM
ADDED : ஜூலை 10, 2025 01:15 PM

கோவை: கோவையில் சீருடை அணிந்த போலீஸ் எஸ்.ஐ.,யை கடுமையான வார்த்தைகளில், தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ் மிரட்டும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் தேர்தல் பிரசாரத்தை துவங்கிய அ.தி.மு.க பொது செயலாளர் இ.பி.எஸ்., நேற்று மாலை கோவை வடக்கு மற்றும் தெற்கு சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்காக அ.தி.மு.க வினர் சார்பில் பல்வேறு பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டது.
அதில் கோவை டவுன்ஹால் பகுதியில் ஏற்கனவே தி.மு.க., சார்பில் வைக்கப்பட்டு இருந்த ஓரணியில் தமிழ்நாடு என்ற இலச்சினையை மறைக்கும் வகையில் அ.தி.மு.க வினரின் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. தங்கள் இலச்சினை மறைக்கப்பட்டதை அறிந்து ஆத்திரம் அடைந்த தி.மு.க.,வினர் அங்கு திரண்டு வந்தனர்.
அவர்களில் பலர், நடந்தும், இரு சக்கர வாகனங்களிலும், டவுன் ஹால் ஒரு வழிப்பாதையில் வந்தனர். ஒரு வழிப்பாதையில் அவர்கள் வருவதை போலீசார் கண்டித்து தடுத்து நிறுத்தினர். அப்போது, போலீசாருக்கும், தி.மு.க.,வினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.அங்கு வந்த தி.மு.க மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ் சீருடையில் இருந்த போலீஸ் எஸ்.ஐ.,யை கடுமையான வார்த்தைகளால் மிரட்டினார்.
அவர், ''எஸ்.ஐ.,யை கடும் கோபத்துடன் என்ன பைத்தியக்காரனா? நீ என்ன ரவுடியா? உன் சட்டையை கழட்டாமல் விடமாட்டேன்'' என்று ஒருமையில் பேசியதுடன், அவருக்கு கடுமையான வார்த்தைகளால் நேரடி மிரட்டல் விடுத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து தி.மு.க வினர் அப்பகுதியில் சிறிது நேரம் மறியலிலும் ஈடுபட்டனர். தற்போது அது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.