UPDATED : மார் 01, 2025 11:11 PM
ADDED : மார் 01, 2025 11:09 PM

சென்னை : “சுயாட்சி தத்துவத்தையும், இருமொழி கொள்கையையும் விட மாட்டேன்,” என, தன் பிறந்த நாளில், வாழ்த்து மழையில் நனைந்த மகிழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் உறுதி தெரிவித்தார்.
தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலினின் 72வது பிறந்த நாள் விழாவை, தி.மு.க.,வினர் நேற்று கொண்டாடினர். பிறந்த நாளையொட்டி தாய் தயாளுவிடம் ஆசி பெற்ற ஸ்டாலின், தந்தை கருணாநிதி, அண்ணாதுரை, ஈ.வெ.ரா., நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து, காலை 8:00 முதல் பிற்பகல் 3:00 மணி வரை, சென்னையில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் தலைவர்களது வாழ்த்துகளை பெற்றார்.
ஆயிரக்கணக்கான தி.மு.க., தொண்டர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஸ்டாலினுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
வெள்ளி செங்கோல், வாள், சிங்கம் சிலை, முழு பலாப்பழம், பழக்கூடைகள், வேட்டி, புத்தகங்கள், சால்வைகள், பேனா என, பல்வேறு பொருட்களை தொண்டர்கள் பரிசாக வழங்கி அசத்தினர்.
தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சித் தலைவர்களின் வாழ்த்து மழையில் நனைந்த முதல்வர் ஸ்டாலின் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.
விழா மேடையில், 'ஒரே இலக்கு... தமிழகத்தின் நலனையும், எதிர்காலத்தையும், யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம்; ஹிந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்.
'தமிழகத்தின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம். தமிழகம் போராடும்; தமிழகம் வெல்லும்' என, முதல்வர் ஸ்டாலின் வாசிக்க, அமைச்சர்கள், தி.மு.க., நிர்வாகிகள் அதை திரும்பக்கூறி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
நிர்வாகிகள், தொண்டர்கள் புடைசூழ பேசிய ஸ்டாலின், “மாநிலத்தில் சுயாட்சி வேண்டும்; ஹிந்தி திணிப்பை கைவிட வேண்டும்; இருமொழி கொள்கையை கொண்டுவர வேண்டும். இதை விடமாட்டேன்; இதுதான் என் பிறந்த நாள் செய்தி.
''நேற்று துவங்கப்பட்ட கட்சிகள் கூட, தி.மு.க.,வை குறைகூறி தான் அரசியல் செய்கின்றன. அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. என் கவலை எல்லாம் நாட்டை பற்றியும், தமிழகத்தை பற்றியும் தான். மாநில உரிமையை நாம் பெற வேண்டும் என்பதே என் கவலையாக உள்ளது,” என்றார்.
பித்தளை சிங்கம் பரிசளிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க., நிர்வாகிகள், 250 கிலோ எடையுள்ள பிரமாண்டமான பித்தளை சிங்கம் சிலை செய்து எடுத்து வந்து, முதல்வர் ஸ்டாலினுக்கு பரிசளித்தனர். அந்த பித்தளை சிங்கம், 'ஹிந்தி தெரியாது போடா, தமிழ் வாழ்க' என்று முழங்கியது.
அதே மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் சிலர், சிவன், பார்வதி, முருகன், விஷ்ணு, கிருஷ்ணர் உள்ளிட்ட வேடங்களில் வந்திருந்தனர். 'கலைகளுக்கு முதல்வர் முக்கியத்துவம் அளிப்பதால், அவருக்கு வாழ்த்து தெரிவிக்க இப்படி வந்தோம்' என்றனர். ஈரோடில் இருந்து மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த, அரசு பள்ளி மாணவ - மாணவியர், 33 பேர், சென்னைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். சீருடையில் வந்த அவர்கள், முதல்வருக்கு மலைத்தேன் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர்.