கடைசி மூச்சு இருக்கும் வரை தலைவர் பதவியை விடமாட்டேன்: அன்புமணிக்கு ராமதாஸ் முற்றுப்புள்ளி
கடைசி மூச்சு இருக்கும் வரை தலைவர் பதவியை விடமாட்டேன்: அன்புமணிக்கு ராமதாஸ் முற்றுப்புள்ளி
UPDATED : ஜூன் 14, 2025 07:05 AM
ADDED : ஜூன் 14, 2025 03:22 AM

சென்னை: வரும் 2026 சட்டசபை தேர்தல் வரை, பா.ம.க., தலைவர் பதவியில் இருப்பேன் எனக் கூறிய, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ், ''2026 தேர்தலுக்கு பிறகும், பா.ம.க., தலைவர் பதவியை விட மாட்டேன். என் மூச்சு அடங்கும் வரை, அன்புமணிக்கு தலைவர் பதவியை கொடுக்க மாட்டேன்,'' என அறிவித்தார். இது பா.ம.க.,வினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், நேற்று ராமதாஸ் அளித்த பேட்டி: அன்புமணிக்கு நான் நல்ல தந்தையாக, வழிகாட்டியாக இருந்திருக்கிறேன். ஆனால், மாமல்லபுரம் மாநாட்டின்போதும், அதன் பிறகும் நடப்பவற்றை பார்க்கும்போது, மிக மிக வருத்தமாக இருக்கிறது. வரும் சட்டசபை தேர்தலுக்கு பிறகு, அன்புமணிக்கு தலைவர் பதவியை கொடுப்பேன் என, சொல்லி இருந்தேன். அதை பா.ம.க.,வில் 99 சதவீதம் பேர் ஏற்கவில்லை. கடைசி வரை நான் தலைவராக இருக்க வேண்டும் என்கின்றனர்.
எனவே, என் மூச்சு அடங்கும் வரை, பா.ம.க., தலைவராக நானே இருப்பேன். அன்புமணிக்கு கொடுக்க மாட்டேன். என் குடும்பத்தினர் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று சொன்னதை, என்னால் காப்பாற்ற முடியவில்லை. தலித் எழில்மலை. பொன்னுசாமி உள்ளிட்டோருக்கு, மத்திய அமைச்சர் பதவி கொடுத்தேன்.
அவர்களின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால், கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியதால், 2004ல் அன்புமணியை 35 வயதில் மத்திய சுகாதார அமைச்சராக்கினேன். இரண்டரை ஆண்டுகளில், என்னால் சமாளிக்க முடியவில்லை என்றார். நான் அவருக்கு எப்படி செயல்பட வேண்டும் என வழிகாட்டினேன். அதனால் பல விருதுகளை வாங்கினார்.
ஈட்டியால் குத்துகிறார்
தந்தை, தாயை மதிக்க வேண்டும். அவர்கள் சொல்படி நடக்க வேண்டும். தந்தை, தாயை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அதை சொன்னாலே அன்புமணிக்கு கோபம் வருகிறது. என்னிடம் 100 ஆண்டுகள் இருப்பீர்கள் என சொல்லிவிட்டு, என் மார்பின் முன்னாலும், பின்னாலும் ஈட்டியில் குத்துகிறார்.
துாக்க மாத்திரை போட்டாலும் துாக்கம் வரவில்லை. அவரை நினைக்கும் போதெல்லாம் இந்நிலைதான். நினைக்காமலும் இருக்க முடியவில்லை. அது பாசத்தால் அல்ல. அதுவெல்லாம் போய்விட்டது. 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் என ராமருக்கு, அவரது தந்தை தசரதன் ஆணையிடுகிறார். அப்போதும், 'மலர்ந்த தாமரை மலர் போல் ராமரின் முகம் பிரகாசமாக இருந்தது' என, கம்பர் வர்ணிக்கிறார்.
ஆனால், அன்புமணிக்கு செயல் தலைவர் பதவி கொடுத்தும் ஏற்க மறுக்கிறார். நிருபர்களை அழைத்து,'ராமதாஸ் உத்தரவுபடி செயல் தலைவராக செயல்படுவேன். எந்த பதவியும் இல்லாவிட்டாலும், சாதாரண தொண்டராக, ராமதாஸ் இடும் கட்டளையை செயல்படுத்துவேன்' என, அன்புமணி அறிவித்தால், பிரச்னை முடிந்து விடும்.
'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை', 'மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்' என்பது முன்னோர் வாக்கு. இதை சொன்னால், அது பொய் என்பார் அன்புமணி. இப்போது கேட்டால், ராமதாஸ் சொல்படிதான் நடக்கிறேன் என்பார். ஆனால், நடப்பதெல்லாம் வேறு.
பார்த்தாலே ரத்த கொதிப்பு
பா.ம.க., தொண்டர்களான, பாட்டாளி சொந்தங்களை பார்க்கும்போது பூரிப்படைகிறேன். ஆனால், அன்புமணியை பார்த்தால் எனக்கு அதிர்ச்சி, மன அழுத்தம் தான் ஏற்படுகிறது. ரத்தக் கொதிப்பு அதிகரிக்கிறது. தூக்க மாத்திரை போட்டல் கூட தூக்கம் வருவதில்லை. சுயம்புவாக பா.ம.க.,வை உருவாக்கிய எனக்கே, அன்புமணி கட்டளையிடுகிறார். கட்சியின் நிறுவனருக்கே கட்டளையிடும் அதிகாரத்தை நான் ஒருபோதும் வழங்கவில்லை.
இளைஞரணி தலைவர் பதவிக்கு பொறுத்தமானவர் விரைவில் நியமிக்கப்படுவார். முறைப்படி, பொதுக்குழுவை கூட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தைலாபுரம் தோட்டத்தில் என்னை சந்திக்க, முன் அனுமதியின்றி யார் வேண்டுமானாலும் வரலாம். போனில் நானே நேரடியாக பேசுகிறேன். மக்களோடு மக்களாக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.