இனி போலீசாரை துாங்க விட மாட்டேன்; தி.மு.க.,வின் 'பி டீம்' தான் விஜய்: அண்ணாமலை
இனி போலீசாரை துாங்க விட மாட்டேன்; தி.மு.க.,வின் 'பி டீம்' தான் விஜய்: அண்ணாமலை
ADDED : மார் 18, 2025 05:31 AM

சென்னை : ''இனி சீருடை அணிந்த ஒரு போலீசாருக்கும் துாக்கம் இருக்காது. தினமும் ஒரு போராட்டம் நடத்தப்படும்; தி.மு.க.,வின், 'பி டீம்' தான் விஜய்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
அவரது பேட்டி:
தி.மு.க., அரசு பெரும் தவறு செய்துள்ளது. ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவோரை கைது செய்கின்றனர். இன்று தடுக்கட்டும்.
அடுத்த ஆர்ப்பாட்டம், தேதி அறிவிக்காமல் நடத்தப்படும். முதல்வர் வீடாகவும், டாஸ்மாக் அலுவலகமாகவும் இருக்கலாம். தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடக்கிறது. டாஸ்மாக் ஊழலில் முதல் குற்றவாளியாக முதல்வர் இருப்பார்.
தமிழகத்தில், பலாத்கார குற்றவாளிகளுக்கு ராஜ மரியாதை. ஊழலை தட்டிக் கேட்டால் சித்ரவதை. பா.ஜ.,வினர் அறவழிப் போராட்டம் நடத்தினர். மாலை, 6:00 மணிக்கு மேல் பெண்களை கைது செய்து வைக்கக் கூடாது. அதற்கு மேலாகியும் விடுவிக்கவில்லை. காவல் துறை செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
காவல் துறை மீது நம்பிக்கை இழந்து விட்டோம். இனி எந்த ஆர்ப்பாட்டத்திற்கும், பா.ஜ., கடிதம் கொடுக்காது. அடுத்த ஒரு வாரத்தில், 5,000க்கும் மேற்பட்ட மதுக்கடைகளில், முதல்வர் ஸ்டாலின் படத்தை, மகளிர் அணியினர் ஆணி அடித்து ஒட்டுவர்.
ஏப்ரல் முதல் வாரத்தில் ஒருநாள், டாஸ்மாக் கடைகளை மூடி போராட்டம் நடத்துவர். வரும் 22ம் தேதி ஒரு போராட்டம் நடத்த வாய்ப்புள்ளது.
பா.ஜ.,வுக்கு மரியாதை கொடுக்காத வரை, காவல் துறைக்கு பா.ஜ.,வும் மரியாதை கொடுக்காது. இனி சீருடை அணிந்த ஒரு போலீசாருக்கும் துாக்கம் இருக்காது. தினமும் ஒரு போராட்டம் நடத்தப்படும்.
அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, சட்ட அமைச்சர் ரகுபதி மேல் நடக்கிறது. அவர், எங்களுக்கு சட்டத்தை பற்றி சொல்கிறார். போலீசாருக்கு தொல்லை கொடுப்பது எங்கள் நோக்கம் அல்ல.
டி.ஜி.பி., மற்றும் கமிஷனர் முறைகேடான உத்தரவுகளை வழங்குகின்றனர். அதை பின்பற்றி, போலீசார், எங்கள் கட்சியினருக்கு தொல்லை கொடுக்கின்றனர்.
நடிகர் விஜயின் த.வெ.க.,வினர், பள்ளி மாணவர்கள் மாதிரி அரசியல் செய்கின்றனர். விஜய் மாதிரி, சினிமா ஷுட்டிங்கில் பாட்டு பாடி, நடிகையரின் இடுப்பைக் கிள்ளி நடனமாடிக் கொண்டு அறிக்கை விடுகிறேனா? நான் களத்தில் நின்று பேசுகிறேன். நாடகம் செய்வது விஜய்; தி.மு.க.,வின் பி டீம் தான் விஜய். அவரது கட்சி, மரியாதை கொடுத்து, மரியாதை வாங்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.