துணை ஜனாதிபதியானால் அரசியலமைப்பை பாதுகாப்பேன்: சுதர்சன் ரெட்டி பேச்சு சுதர்சன் ரெட்டி பேச்சு
துணை ஜனாதிபதியானால் அரசியலமைப்பை பாதுகாப்பேன்: சுதர்சன் ரெட்டி பேச்சு சுதர்சன் ரெட்டி பேச்சு
ADDED : ஆக 25, 2025 01:16 AM

சென்னை: ''நான் துணை ஜனாதிபதியாக வாய்ப்பு அளித்தால், அரசியலமைப்பை பாதுகாப்பேன்,'' என, 'இண்டி' கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி கூறினார்.
எதிர்க்கட்சிகள் இடம் பெற்ற, 'இண்டி' கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான சுதர்சன் ரெட்டி நேற்று தமிழகம் வந்தார். முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து, அவர் ஆதரவு திரட்டினார்.
சென்னை தி.நகரில் உள்ள அக்கார்டு ஹோட்டலில் நடந்த தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், எம்.பி.,க்கள் கூட்டத்தில், சுதர்சன் ரெட்டி பேசிய தாவது:
தமிழகத்தின் திராவிட தலைவர்களையும், தமிழ் மொழியையும், அதன் கலாசாரத்தையும் வணங்குகிறேன். தமிழகம், கல்வி மற்றும் சுகாதாரத்தில், தொலைநோக்கு பார்வையுடன், நாட்டையே வழிநடத்திக் கொண்டிருக்கிறது.
நான் நீதிபதியாக இருந்த போது, பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளேன். தற்போது எனக்கான தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். எனக்கு வாய்ப்பு அளித்தால், இந்தியாவின் அரசியலமைப்பை பாதுகாக்க பாடுபடுவேன்.
முதல்வர் ஸ்டாலின், புதிய கருத்தாக்கங்களை உருவாக்குவதில் சாம்பியனாக திகழ்கிறார். மிக தைரியமாக தமிழகத்தை வழிநடத்துகிறார்.
கூட்டாட்சி தத்துவத்தை நிலைப்படுத்திட, அதற்கு எதிரான சக்திகளை எதிர்த்து போராடி வருகிறார். தற்போது, நகராட்சி மன்றங்களுக்கு இணையாக, மாநில அரசுகளின் அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய சூழலில், நாட்டில் கூட்டாட்சிக்கு மட்டுமல்லாது, அரசியலமைப்பு சட்டத்திற்கும் ஆபத்து நிலவுகிறது. ஒரே நாடு குறித்து பலர் பேசி வருகின்றனர். இது, அரசியலமைப்புக்கு எதிரானது. நாம் அனைவரும் ஒரே நாடு தான்.
மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா. மாநிலங்கள் இல்லையெனில், இந்திய ஒன்றியம் இல்லை. நான் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல், என்னை பற்றி எதிர்க்கட்சியினர் பேச துவங்கி உள்ளனர்.
'உங்களின் வாழ்க்கையில், இதுவரை அரசியலில் பணியாற்றியதே இல்லையே' என்கின்றனர். அவர்கள் ஒன்றை மறந்து விட்டனர்.
'யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம்' என, அரசியலமைப்பு கூறுகிறது.
நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. எந்த கட்சியிலும் சேர மாட்டேன். என் மீது நம்பிக்கை வைத்த, 'இண்டி' கூட்டணிக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் நான் சத்தியம் செய்கிறேன். அரசியலமைப்பை பாதுகாக்காமல் நான் வீழ மாட்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

