நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு ஒரு மாத சிறை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு ஒரு மாத சிறை
UPDATED : மே 23, 2025 11:58 PM
ADDED : மே 23, 2025 11:32 PM

சென்னை : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசின் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்ஷுல் மிஸ்ராவுக்கு, ஒரு மாத சிறை தண்டனை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், விநாயகா நகரைச் சேர்ந்தவர் லலிதாம்பாள். இவரது சகோதரர் விஸ்வநாதன், சென்னை ஷெனாய் நகரில் வசிக்கிறார். இவர்களுக்கு கோயம்பேடில் 17 சென்ட் நிலம் உள்ளது.
அந்த நிலத்தை பொதுநலனுக்காக எனக்கூறி, 1983ல் தமிழக அரசு கையகப்படுத்தியது. பின், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக, இந்த நிலம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வசம் வந்தது. ஆனால், எதுவும் கட்டாமல் நிலம் சும்மா கிடந்தது.
இருபது ஆண்டுகளாக அரசு பயன்படுத்தாமல் வைத்திருக்கும் எங்கள் நிலத்தை திரும்ப வழங்க வேண்டும் என, 2003ல் உயர் நீதிமன்றத்தில் இருவரும் வழக்கு தொடர்ந்தனர். மனுதாரர்களின் கோரிக்கையை பரிசீலித்து முடிவு எடுக்க கோர்ட் உத்தரவிட்டது.
ஆனால், 10.5 சென்ட் நிலத்தை மட்டும் அரசு திருப்பி கொடுத்தது. மீதமுள்ள 6.5 சென்ட் நிலம், நெசப்பாக்கம் சாலை விரிவாக்கத்துக்கு தேவை என கூறி, வீட்டுவசதி வாரியம் வசம் வைத்து கொண்டது.
கையகப்படுத்திய நிலத்தை முழுதுமாக திருப்பி தரக் கோரி, 2023ல் இருவரும் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர்.
நாற்பது ஆண்டுகள் கடந்தும் நீடித்த பிரச்னை குறித்து விசாரித்த உயர் நீதிமன்றம், 'மனுதாரர்களை நேரில் அழைத்து விசாரித்து, இரண்டு மாதங்களில் சட்டப்படி தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்' என, சி.எம்.டி.ஏ., எனும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு, 2023 நவம்பரில் உத்தரவு பிறப்பித்தது.
அந்த உத்தரவையும் அமல்படுத்தவில்லை என கூறி, லலிதாம்பாளும், விஸ்வநாதனும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். எதிர் தரப்பாக சி.எம்.டி.ஏ., குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்போது சி.எம்.டி.ஏ.,வின் உறுப்பினர் செயலராக இருந்தவர் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்ஷுல் மிஸ்ரா.
வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. 'நான் கடந்த பிப்ரவரி 9ம் தேதி தான் இந்த பதவிக்கு வந்தேன். பிப்., 21ல் மனுதாரர்களை அழைத்து விசாரணை நடத்தினேன்.
'பிப்., 28ம் தேதி அவர்களின் விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவு பிறப்பித்தேன். நிர்வாக மாற்றங்கள் காரணமாக, முந்தைய உத்தரவை செயல்படுத்துவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது; வேண்டுமென்று நீதிமன்ற உத்தரவை நிராகரிக்கவில்லை' என, மிஸ்ரா விளக்கம் அளித்தார்.
அதை நீதிபதி ஏற்கவில்லை. 'குறித்த காலத்தில் மனுவை பரிசீலிக்காததால், மனுதாரர்கள் நீதிமன்றத்தை அணுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதன்படி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் அமல்படுத்தவில்லை.
'இது, நீதிமன்ற அவமதிப்பு தான். நியாயமும் வழங்காமல், தாமதத்திற்கு நொண்டி சாக்குடன் இங்கு வந்துள்ளார்' என நீதிபதி விமர்சித்தார்.
'இவர் மட்டுமல்ல; அதிகாரிகள் கடமையை செய்யாததால், மக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலையை பல வழக்குகளில் பார்க்கிறோம். நீதித்துறை தலையீட்டிற்கு பின்னும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தங்களுக்கு வசதியான காரணங்களை சொல்லி, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் முற்றிலுமாக புறக்கணிக்கின்றனர்.
'அரசு அதிகாரிகள், தங்கள் மேலதிகாரிகளுக்கு மட்டுமல்ல; சட்டம் மற்றும் அரசியலமைப்புக்கும் பதிலளிக்க கடமைப்பட்டவர்கள். இந்த வழக்கில் ஆவணங்களை பார்க்கும்போது, வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது.
'உறுப்பினர் செயலரின் செயல் தவறு மட்டுமல்ல; சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விடுக்கும் வகையில் உள்ளது' என நீதிபதி தெரிவித்தார்.
'எனவே, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அப்போதைய உறுப்பினர் செயலர் அன்ஷுல் மிஸ்ராவுக்கு, ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு, 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
'இந்த தொகையை, அன்ஷுல் மிஸ்ராவின் ஊதியத்தில் அரசு பிடித்தம் செய்ய வேண்டும். மூன்று வாரங்களில் இழப்பீடு தொகையை வழங்காவிட்டால், மேலும் 10 நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்' என நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேல்முறையீடு செய்ய ஏதுவாக, இந்த தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது. குறித்த காலத்தில் மேல்முறையீடு செய்யாவிட்டால், அன்சுல் மிஸ்ரா தண்டனையை அனுபவிக்க தேவையான நடவடிக்கைகளை, உயர் நீதிமன்ற பதிவுத் துறை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவரது உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அன்ஷுல் மிஸ்ரா தற்போது தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குநராக இருக்கிறார்.