அவமதிப்பு வழக்கில் ஆஜராக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு உத்தரவு
அவமதிப்பு வழக்கில் ஆஜராக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு உத்தரவு
ADDED : ஜூலை 17, 2025 12:27 AM
சென்னை:நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆறு அதிகாரிகள் ஆஜராகும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1991ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு, தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாய உத்தரவின்படி மாற்றுப் பணி வழங்கப்பட்டது.
அதன்படி, வணிக வரித் துறையில் இளநிலை உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட சேக் அப்துல் காதர், அழகேசன், சர்மிளா பேகம் உட்பட 16 பேரின் பணியை, 2004ம் ஆண்டு முதல் வரன்முறை செய்து, 2010ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்காமல், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டதை எதிர்த்து, 16 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'உச்ச நீதிமன்ற உத்தரவுபடி மனுதாரர்களை, 1996 முதல் பணி வரையறை செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும்' என, 2024 பிப்., மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை, தமிழக அரசு அமல்படுத்தவில்லை என கூறி, 16 பேரும் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதி பட்டு தேவானந்த் விசாரித்தார்.
தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகத் துறை முதன்மை செயலர் சமயமூர்த்தி, நிதித் துறை செயலர் உதயசந்திரன், வருவாய் நிர்வாகத் துறை முதன்மை ஆணையர் ராஜேஷ் லக்கானி,
பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், வணிக வரித் துறை கமிஷனர் ஜெகந்நாதன், கருவூலம் மற்றும் கணக்கு துறை கமிஷனர் கிருஷ்ணன் உன்னி ஆகிய ஆறு அதிகாரிகள், ஆக., 4ம் தேதி நேரில் ஆஜராகும்படி, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டார்.