தாலிக்கொடியை பறித்த சுங்கத்துறை பெண் அதிகாரிக்கு ஐகோர்ட் சூடு
தாலிக்கொடியை பறித்த சுங்கத்துறை பெண் அதிகாரிக்கு ஐகோர்ட் சூடு
ADDED : பிப் 08, 2025 12:45 AM
சென்னை:இலங்கையைச் சேர்ந்தவர் தனுஷிகா. இவர், 2023ல் ஜெயகாந்த் என்பவரை மணந்தார். திருமணத்திற்குப் பின், கணவர் பிரான்ஸ் நாட்டிற்கு சென்று விட்டார். தமிழகத்தில் உள்ள கோவில்களில் வழிபாடு நடத்த, தனுஷிகா, இலங்கையில் இருந்து தன் மாமியார், நாத்தனார் உள்ளிட்ட உறவினர்களுடன், அதே ஆண்டு டிசம்பர், 30ல் தமிழகம் வந்தார்.
அப்போது அவர், 45 கிராம் எடையுள்ள வளையல்கள் மற்றும், 45 கிராம் எடையுள்ள தாலிக்கொடி அணிந்து வந்தார்.
சென்னை விமான நிலையத்தில், தனுஷிகா அணிந்திருந்த வளையல்கள் மற்றும் தாலிக்கொடி அதிக எடையுடனும், பெரியதாகவும் இருப்பதாகக் கூறி, அவற்றை சுங்கத்துறை பெண் அதிகாரியான மைதிலி உள்ளிட்டோர் பறிமுதல் செய்தார்.
சமீபத்தில் தான், தனக்கு திருமணம் நடந்ததாகவும், நகைகள் அனைத்தும் தனக்கு சொந்தமானது என்றும், தனுஷிகா கூறியும், அதை ஏற்காமல், நகையை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, சுங்கத்துறையினர் பறிமுதல் செய்த நகைகளை திரும்ப ஒப்படைக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தனுஷிகா வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவு:
திருமணத்துக்குப் பின், பெண்கள் தாலி அணிந்திருப்பது நம் கலாசாரம். அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ளாமல், தாலியை பறிமுதல் செய்துள்ளனர்.
தாலியை கழற்றும்படி, ஒரு பயணியிடம் கூறுவதும், வலுக்கட்டாயமாக பறிப்பதும், நம் நாட்டின் கலாசாரத்தையும், ஹிந்து மத நடைமுறைகளையும் சிதைக்கும் வகையில் உள்ளது. எந்த காரணத்துக்காகவும் அதை சகித்துக்கொள்ள முடியாது.
மனுதாரர், அவர் தரப்பு விளக்கத்தை அளிக்க போதிய வாய்ப்பு வழங்கவில்லை. பறிமுதல் செய்த சம்பவத்தில், குறிப்பிட்ட அந்த பெண் அதிகாரி கெட்ட நோக்கத்துடன், மற்ற அதிகாரிகளின் கவனத்தை திசை திருப்பி, அதன் வாயிலாக வேறு யாருக்கோ பயன் கிடைக்கச் செய்யும் நோக்கத்துடன், இப்படி நடந்திருப்பதாக தோன்றுகிறது.
எனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான சுங்கத்துறை முதன்மை கமிஷனர், இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தனுஷிகாவிடம் இருந்து பறிமுதல் செய்த நகைகளை ஒரு வாரத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மேலும், பெண் அதிகாரி மைதிலியின் நடவடிக்கைகள், ஒரு அதிகாரிக்குரியதாக இல்லை. அவரின் நடவடிக்கை குறித்தும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நடுத்தர குடும்பத்தில் கூட, அதிக எடையில் தாலிக்கொடி அணிந்திருப்பது வழக்கமானது.
எனவே, சோதனை நடத்தும் அதிகாரிகள், மதம் தொடர்பான நடைமுறைகளுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என, நீதிமன்றமும் தெரிவித்துள்ளது. சுங்க சட்டத்தை இயற்றும் போது, பயணியர் அணிந்திருக்கும் நகைகளுக்கு, பார்லிமென்ட் விலக்கு அளித்துள்ளது என்பதை, அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.