காணொளி வாயிலாக விசாரணை முதியவருக்கு ஐகோர்ட் அனுமதி
காணொளி வாயிலாக விசாரணை முதியவருக்கு ஐகோர்ட் அனுமதி
ADDED : அக் 17, 2024 01:38 AM
சென்னை:காணொளி வாயிலாக சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற விசாரணை நடவடிக்கையில் முதியவர் பங்கேற்க, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
வங்கி மோசடி தொடர்பாக, 2007ல், ஐந்து பேருக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில், 2016ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சிலரது வாக்குமூலத்தின் அடிப்படையில், கேரளாவைச் சேர்ந்த ஜேக்கப் என்பவரை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கில் சேர்த்தது. இவர், பெடரல் வங்கியின் மேலாளராக பதவி வகித்தவர்.
இவ்வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக, ஜேக்கப்பை நேரில் ஆஜராக, சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, 84 வயது முதியவரான ஜேக்கப், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'பல்வேறு உடல்நலக் குறைவு பிரச்னைகளை எதிர்கொள்கிறேன். இவ்வழக்கில் நேரடியாக ஆஜராகும்படி, என்னை வற்புறுத்தக் கூடாது. காணொளி வாயிலாக ஆஜராவதை ஏற்க வேண்டும்' என கோரினார்.
மனு, நீதிபதி என்.சேஷசாயி முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் சி.எஸ்.எஸ்.பிள்ளை, வழக்கறிஞர் மாருதிராஜ் ஆஜராகி, 'குற்றப்பத்திரிகையில் ஜேக்கப் பெயர் இல்லை. 17 ஆண்டுகளுக்குப் பின் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது. புதிய சட்டத்தில், காணொளி வாயிலாக குற்றச்சாட்டு பதிவுக்கு வகை செய்யப்பட்டுள்ளது' என்றனர்.
சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் பி.மோகன் ஆஜரானார்.
இரு தரப்பு வாதங்களுக்குப் பின், நீதிபதி சேஷசாயி பிறப்பித்த உத்தரவு:
ஒருவருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்பதற்காக, விசாரணையில் பங்கேற்க அனைத்து வசதிகளையும் துறக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
வழக்கில் புலன்விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்த பின், குற்றச்சாட்டுக்களை பதிவு செய்யும் பொறுப்பு நீதிமன்றத்துக்கு உள்ளது.
அனைவருக்கும் வசதியாக, எளிதாக அமையும் வகையில், எங்கெங்கு முடியுமோ அங்கு தொழில்நுட்பத்தை நீதிமன்றம் கையாளலாம். புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களையும், மனுதாரரின் வழக்கறிஞர் எடுத்துக் காட்டினார்.
புதிய சட்டத்தில், நீதிமன்ற நடைமுறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் தேவை பற்றி கூறப்பட்டுள்ளது. அதை பயன்படுத்துவது உகந்ததாக இருக்கும் என, இந்த நீதிமன்றமும் கருதுகிறது. மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.