ஓய்வூதிய பலன்கள் வழங்குவதை 3 மாதத்திற்கு மேல் நிறுத்த முடியாது உள்ளாட்சிகளுக்கு ஐகோர்ட் கண்டிப்பு
ஓய்வூதிய பலன்கள் வழங்குவதை 3 மாதத்திற்கு மேல் நிறுத்த முடியாது உள்ளாட்சிகளுக்கு ஐகோர்ட் கண்டிப்பு
ADDED : நவ 03, 2024 12:17 AM
சென்னை:'ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய பலன்கள் வழங்குவதை, மூன்று மாதங்களுக்கு மேல் தள்ளி வைக்க முடியாது; அவர்களுக்கான பலன்களை வழங்க, நிதியை விடுவிக்க என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை, உள்ளாட்சி நிர்வாக இயக்குனர் தெரிவிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாநகராட்சியில், உதவிப் பொறியாளராக பணியாற்றி, 2022ல் ஓய்வு பெற்றவர் சிபி சக்கரவர்த்தி; தனக்கு வர வேண்டிய ஓய்வூதிய பலன், 51.70 லட்சம் ரூபாய் வழங்கக்கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. சேலம் மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2017 முதல் தற்போது வரை ஓய்வு பெற்ற 194 பேர் பெயர்கள் அடங்கிய பட்டியலும், அவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட வேண்டி உள்ளதும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க, 200 கோடி ரூபாய் வேண்டியுள்ளது என்றும், சீனியாரிட்டி அடிப்படையில், ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:
கடந்த 2022ல் மனுதாரர் ஓய்வு பெற்றுள்ளார் என்பதால், அவருக்கு ஓய்வூதிய பலன் வழங்க நீண்ட காலமாகும். இந்த வேதனையான நிலை தான், பல மாநகராட்சிகளிலும் நிலவுகிறது. அரசியலமைப்பு சட்டப்படி சமூக அடிப்படையிலான ஆட்சியில், அனைவரும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும்.
அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு, உயர்பதவிகளில் இருப்பவர்களுக்கு, ஓய்வூதிய பலன் வழங்கப்படாமல் இருக்காது. கடைநிலை ஊழியர்களுக்கு தான் இது நடக்கும்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பட்டியலை பார்க்கும்போது, ஓய்வூதிய பலன்களை பெற, 2017ல் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் காத்திருக்கின்றனர். மாநகராட்சியின் இந்த சமநிலையற்ற செயல்பாட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இந்த மாநகராட்சியில் மட்டும் இதுபோன்ற நிலை இல்லை; மேட்டூர் நகராட்சியிலும் இதுபோன்ற நிலையை, இந்த நீதிமன்றம் அணுகியது.
மக்கள் நல அரசு என்பது, பாதிக்கப்படக்கூடிய மக்களை, குறிப்பாக சமூக பொருளாதாரத்தில் கீழ் நிலையில் இருப்பவர்களை, மூத்த குடிமக்களை எப்படி நடத்துகிறது என்பதை வைத்தே மதிப்பிடப்படுகிறது.
இவர்களின் பங்களிப்பை அரசு மறக்கிறது என்றாலோ, ஓய்வு பெற்ற பின் மறந்து விட்டாலோ, அவர்களை அவமதிப்பு செய்வதாகும்.
ஓய்வு பெறும் வரை அவர்கள் ஆற்றிய பணிக்கு நன்றிக்கடன் செலுத்த, அரசும் அதன் துறைகளும் தவறுவது போலாகும்.
சட்டத்தின் ஆட்சி முறை உள்ள நாட்டில், இத்தகைய நிலை நீடிப்பதை அனுமதிக்க முடியாது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பலன்களை வழங்காமல் இருக்கும் நிலை தொடர்வதை, இந்த நீதிமன்றம் அனுமதிக்காது.
இது, அடிப்படை உரிமையை மீறுவது போலாகும். தங்கள் வாழ்வாதாரங்களுக்கு, இந்த ஓய்வூதிய பலன்களை சார்ந்தே பலர் இருப்பர். அதையும் வழங்கவில்லை என்றால், அவர்களின் வாழ்வுரிமையில் நேரடியாக கை வைப்பது போலாகும்.
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பலன்களை வழங்க, அரசிடம் நிதி உதவி கோரியிருப்பதாக, மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
நிதி இல்லை என்பதற்காக, ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய பலன்களை நீண்ட காலத்துக்கு தள்ளி வைக்க முடியாது. எனவே, இந்த வழக்கில், உள்ளாட்சி நிர்வாக இயக்குனரை சேர்க்கிறேன்.
பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களுக்காக, நிதி விடுவிக்க எடுக்கப்போகும் நடவடிக்கை குறித்து, உள்ளாட்சி நிர்வாக இயக்குனர் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
ஓய்வூதிய பலன்களை வழங்குவதில், ஓய்வு பெற்ற நாளில் இருந்து, மூன்று மாதங்களுக்கு மேல் தள்ளி வைக்கக் கூடாது. அத்தகைய ஏற்பாட்டை உருவாக்கி, எதிர்கால நடவடிக்கைகள் குறித்து, நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.