செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு தடை கோரியவருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு தடை கோரியவருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
ADDED : நவ 15, 2024 08:54 PM
சென்னை:மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.அரவிந்த் என்பவர் தாக்கல் செய்த மனு:
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கை, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க அதிகாரமில்லை.
எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு மற்றும் அனைத்து குற்ற வழக்குகளையும், அதற்கென அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும். செந்தில் பாலாஜியை கைது செய்தபோது, உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாததால், அதற்கு காரணமான அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். மூன்றாம் நபர், வழக்கு விசாரணையில் தலையிட முகாந்திரம் இல்லை என, மனுவை நீதிமன்றம் திரும்ப அளித்தது.
எனவே, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'எதன் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது?' என, மனுதாரர் தரப்புக்கு, நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளதால், தனிப்பட்ட முறையில் இம்மனுவை தாக்கல் செய்துள்ளதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அமலாக்கத் துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், ''விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. வழக்குக்கு தொடர்பில்லாத நபர், இதுபோல மனுக்களை தாக்கல் செய்ய முகாந்திரம் இல்லை,'' என்றார்.
இதையடுத்து, 'மனுதாரர் இந்த மனுக்களை திரும்பப் பெறவில்லை எனில் அபராதம் விதிக்கப்படும்' என, நீதிபதிகள் எச்சரித்தனர். பின், மனுவை திரும்ப பெறுவதாக, மனுதாரர் கூறியதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.