ஒரே சான்றிதழ் வழங்காவிட்டால் தி.மு.க., வுக்கு எதிராக பிரசாரம்; சீர்மரபினர் நலச்சங்கத்தினர் கெடு
ஒரே சான்றிதழ் வழங்காவிட்டால் தி.மு.க., வுக்கு எதிராக பிரசாரம்; சீர்மரபினர் நலச்சங்கத்தினர் கெடு
ADDED : ஏப் 22, 2025 05:48 AM

மதுரை : நாளை (ஏப்.23) நடக்கஉள்ள பிற்பட்டோர் நலத்துறைக்கான மானிய கோரிக்கையின் போது 68 சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு டி.என்.டி., என ஒரே ஜாதி சான்றிதழ் வழங்குவதை அறிவிக்காவிட்டால் வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளதாக மதுரையில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் தெரிவித்தனர்.
மதுரை கலெக்டர் சங்கீதாவை சந்தித்து இதுதொடர்பாக நிர்வாகிகள் மனு அளித்தனர். சங்கத்தின் மாநில மகளிரணி தலைவி தவமணி தேவி, நிர்வாகிகள் முனுசாமி, பழனிசாமி, மருதுபாலு, முருகன், விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:
சீர்மரபினர் ஜாதிகளுக்கு டி.என்.டி., என சான்றிதழ் இருந்ததை எம்.ஜி.ஆர்., காலத்தில் டி.என்.சி., என மாற்றினார். 68 சமுதாயத்தினருக்கும் சேர்த்து டி.என்.டி., என மாற்றுவதாக முன்னாள் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். சான்றிதழ் வாங்கிய பின் பார்த்தால் மத்திய அரசு சான்றிதழில் டி.என்.டி., என்றும், மாநில அரசு சான்றிதழில் டி.என்.சி., என்றும் வேறாக இருந்தது.
எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் 'தான் ஆட்சிக்கு வந்தால் டி.என்.டி., சான்றிதழ் தருவதாக தேர்தல் வாக்குறுதி' அளித்தார், ஆனால் செய்யவில்லை. அடுத்ததாக லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக ஸ்ரீவில்லிபுத்துார் வந்த போது 'டி.என்.டி.,' சான்றிதழுக்காக கையெழுத்திட்டேன் என்றார். ஆனால் 'டி.என்.டி., / டி.என்.சி.,' என்று சான்றிதழ் வழங்கப்பட்டது. டி.என்.டி., என ஜாதி சான்றிதழ் தரவில்லை என்றால் தி.மு.க., வை எதிர்த்து ஓட்டு போடுவோம். எதிர்த்து பிரசாரம் செய்வோம்.
தமிழகத்தில் டி.என்.டி., பிரிவு இல்லாததால் மத்திய அரசின் சலுகைகளை நாங்கள் பெறமுடியவில்லை. மத்திய அரசின் சலுகையாக மாநில அரசுக்கு கிடைக்கவேண்டிய ரூ.1600 கோடியும் இழப்பாகி விட்டது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கான மானிய கோரிக்கை நாளை (ஏப்.23) நடக்கும் போது டி.என்.டி., சான்றிதழ் வழங்குவதை அமைச்சர் மூலம் அறிவிக்க வேண்டும். நாங்கள் முதல்வரிடம் வாக்குறுதி கேட்கவில்லை. சான்றிதழ் தருகிறேன் என்று சொன்னதை செயலில் காட்ட வேண்டும் என்றனர்.