'பொன்முடி மீது நடவடிக்கை எடுத்தால் மற்றவர்கள் பயப்படுவர்'
'பொன்முடி மீது நடவடிக்கை எடுத்தால் மற்றவர்கள் பயப்படுவர்'
ADDED : ஏப் 19, 2025 07:43 PM
திருச்சி:''வெளி மாநிலங்களில், தமிழகத்துக்கு தலைக்குனிவு ஏற்படாமல் இருக்க, அமைச்சர் பொன்முடி மீது, முதல்வர் ஸ்டாலின் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் கூறினார்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுாரில், த.மா.கா.,வின் டெல்டா மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற பின், வாசன் அளித்த பேட்டி:
இருட்டில் நடப்போருக்கு இயற்கையாகவே பயம் வந்துவிடும். பயத்தைப் போக்க, சத்தமாக பாடிய படியே செல்வோர். அப்படியொரு பயத்தில் தான், தி.மு.க., தற்போது உள்ளது. அது, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியால் ஏற்பட்டிருக்கும் பயம்.
தி.மு.க., ஆட்சியில் அதிகார துஷ்பிரயோகம் அதிகம் உள்ளது.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் த.மா.கா.,வும் உள்ளது. முக்கிய கட்சியாக கூட்டணிக்குள் இருக்கும் த.மா.கா.,வுக்கு தேர்தல் நெருக்கத்தில் எத்தனை சீட் என்பது முடிவாகும்.
எந்தவிதமான யுக்திகளை கையாண்டாலும் சரி, இம்முறை தி.மு.க., ஆட்சியை அகற்றும் முடிவுக்கு வந்துவிட்டனர் மக்கள்.
தாங்கள் 'அவுட் ஆப் கண்ட்ரோலில்' இருப்பதாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அப்படி அவுட் ஆப் கண்ட்ரோலாக செயல்பட்டதால் தான், தொடர்ந்து தி.மு.க.,வினரை நோக்கி அமலாக்கத்துறை ரெய்டுகள் நடக்கின்றன.
வெளி மாநிலங்களில், தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்படாமல் இருக்க, அமைச்சர் பொன்முடி மீது, முதல்வர் ஸ்டாலின் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் பொறுப்பில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும். அப்போதுதான், ஆபாசமாக பேசக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் மற்றவர்களும் செயல்படுவர். முதல்வரை வற்புறுத்தி, பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வைக்கும் துணிச்சல், தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு இல்லை.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

