ADDED : செப் 22, 2024 02:56 AM
சென்னை:கோவை மாவட்டம், பேரூர் தாலுகாவில், மலையடிவார கிராமங்களில் மண் எடுப்பதற்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மண் எடுக்கும் பணிகளை, உடனடியாக தடுத்து நிறுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், பேரூர் தாலுகாவில், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள மதுக்கரை, ஆலந்துரை, வெள்ளிமலை உள்ளிட்ட கிராமங்களில், சட்டவிரோதமாக மண் எடுக்கப்படுவதாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில், வழக்கறிஞர் புருேஷாத்தமன் முறையிட்டார். சட்டவிரோதமாக மண் எடுப்பது தொடர்பாக, வீடியோ ஆதாரங்களையும் அளித்தார்.
இதையடுத்து, 'மலையடிவார கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய, கலெக்டருக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், கனிமவளத் துறை உதவி இயக்குனர் ஆய்வு செய்தது ஏன்' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
'கனிமவளத் துறை உதவி இயக்குனர் தாக்கல் செய்த அறிக்கையில், மண் எடுத்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக கூறியிருப்பது வெறும் கண் துடைப்பு; எந்த கட்டுப்பாடும் இன்றி பெருமளவில் செம்மண் எடுக்கப்பட்டது, வீடியோ வாயிலாக உறுதியாகிறது. இவ்வாறு மண் எடுக்கப்படுவதை அனுமதித்தால், மேற்கு தொடர்ச்சி மலையே காணாமல் போய் விடும்; நிலச்சரிவு ஆபத்து ஏற்படும்' என, நீதிபதிகள் எச்சரித்தனர்.
மண் எடுக்கப்படுவதால் உருவாகும் குழியில், யானை போன்ற விலங்குகள் விழுந்து விடும் ஆபத்து உள்ளதாகவும், எனவே, இந்தப் பகுதியில் அரசு மற்றும் பட்டா நிலங்களில் மண் எடுக்க தடை விதிப்பதாகவும், நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இப்பகுதிகளில் மண் எடுக்கும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தவும் உத்தரவிட்டனர்.
மண் எடுப்பது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்காவிட்டால், சி.பி.ஐ., போன்ற புலனாய்வு ஏஜன்சி வசம் ஒப்படைக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர். சட்டவிரோதமாக மண் எடுப்பவர்களை கைது செய்யவும், இயந்திரங்களை பறிமுதல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.