'சாத்தனுார் அணையை திறக்காமல் இருந்திருந்தால் ஆறாத துயரமாக நிலைமை மாறியிருக்கும்'
'சாத்தனுார் அணையை திறக்காமல் இருந்திருந்தால் ஆறாத துயரமாக நிலைமை மாறியிருக்கும்'
ADDED : டிச 03, 2024 10:42 PM
சென்னை:'சாத்தனுார் அணையில் இருந்து, ஐந்து முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வினாடிக்கு, 1.80 லட்சம் கனஅடி நீரை திறந்து விடாமல் இருந்திருந்தால், பாதிப்புகள் கணக்கில் அடங்காமல் போயிருக்கும்; ஆறாத துயரமாக அது மாறியிருக்கும்' என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனுார் அணையில் இருந்து முன்னறிவிப்பின்றி, திடீரென அதிகளவில் தண்ணீரை வெளியேற்றியதால், நான்கு மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டனர் என்ற, உண்மைக்கு மாறான தகவல் பரப்பப்படுகிறது.
எச்சரிக்கை விடுத்தார்
'பெஞ்சல்' புயலால், பெரும் மழைப்பொழிவால், சாத்தனுார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதைத் தொடர்ந்து முன்கூட்டியே நீர்வரத்தை கணித்து, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது; தென்பெண்ணையாற்றில் நீர் வெளியேற்றப்பட்டது.
நீர் வெளியேற்றப்படும் போது, கரைகளில் உள்ள கொளமாஜனுார், திருவாதனுார், புதுார் செக்கடி, ராயண்டபுரம், அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானுார் உள்ளிட்ட பல கிராமங்களின் பெயர்களை, சாத்தனுார் அணையின் உதவி செயற்பொறியாளர் குறிப்பிட்டு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தார்.
ஆற்றில் அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இழப்புகளை தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும், கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டார். அரசு உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
வெள்ள நீர் வெளியேறியபோது, அனைத்து சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள தரைப்பாலங்கள் மீது வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அணையின் உதவி செயற்பொறியாளர், நீரின் அளவை தொடர்ந்து கண்காணித்து, அவ்வப்போது எச்சரிக்கையும் செய்து வந்தார்.
பாதுகாத்திருக்கிறது
மழையால் நீர்வரத்து அதிகமானதால், 2ம் தேதி, 5ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வினாடிக்கு, 1.80 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. சாத்தனுார் அணையில் மொத்தமாக 7 டி.எம்.சி., அளவுக்கு தான் நீர் சேமிக்க முடியும். நான்கு மற்றும் 5வது முன்னெச்சரிக்கை விடப்பட்ட நள்ளிரவு நேரத்தில், கணிக்க முடியாத அளவுக்கு அணைக்கு நீர் வந்து கொண்டிருந்தது.
ஐந்தாவது முன்னெச்சரிக்கை அறிவிப்புக்கு பின்னும் நீர்வரத்து குறையாமல், மிக அதிகளவில் இருந்தது. அந்த நேரத்தில் அணையில் இருந்து, 1.80 லட்சம் கன அடி நீரை திறந்து விடாமல் இருந்திருந்தால், அணைக்கு பெரிய ஆபத்து ஏற்பட்டு, 7 டி.எம்.சி., நீர் வெளியேறி இருக்கும்.
அதனால், ஏற்படும் பாதிப்புகள் எல்லாம் கணக்கில் அடங்காது; ஆறாத துயரமாக அது மாறியிருக்கும். பெருமளவில் ஏற்பட இருந்த உயிர் இழப்புகளை மிக சாதுரியமாக செயல்பட்டு, மக்களை அரசு பாதுகாத்திருக்கிறது என்பது நீர் மேலாண்மை, அணை பாதுகாப்பியல் வல்லுநர்களுக்கு புரியும்.
நிலைமையை அரசு சரியாக கணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டதால் தான் பெரும் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன. வீடுகள், விவசாய நிலங்கள் மட்டும்தான் வெள்ளநீரில் மூழ்கின.
இதை எல்லாம் புரிந்து கொள்ளாமல், உயிர்கள் விஷயத்திலும், எதிர்க்கட்சிகள் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு, அவதுாறுகளை மட்டுமே அள்ளி வீசுகின்றன; பொய்கள் என்றுமே விலை போகாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.