'முதல்வருக்கு பாராட்டு விழா என்றால் வழக்கு ரத்தாகிறது': உதயகுமார் கிண்டல்
'முதல்வருக்கு பாராட்டு விழா என்றால் வழக்கு ரத்தாகிறது': உதயகுமார் கிண்டல்
ADDED : ஜன 28, 2025 06:21 AM

மதுரை : ''மக்கள் உரிமைக்காக போராடினால் பொய் வழக்கு பாய்கிறது. முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என்றால் பொய் வழக்கு ரத்தாகிறது'' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறினார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: 'நானும் ஒரு கம்யூனிஸ்ட்' என்று ஸ்டாலின் பலமுறை பேசி வருகிறார். ஆனால், மக்கள் உரிமைக்காக போராடினால் அனைத்து தலைவர்கள் மீதும் தொடர்ந்து வழக்கு தொடுத்து வருகிறார். இதுகுறித்து பலமுறை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சட்டசபையில் பதிவு செய்துள்ளார்.
மேலுாரில் முதல்வருக்கு பாராட்டு விழா மதியம் 3:00 மணிக்கு நடைபெறுகிறது. மதியம் ஒரு மணியளவில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கு ரத்து என்ற அரசாணை வெளியிடப்படுகிறது. அப்படியானால், ஒவ்வொரு முறையும் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தித்தான், வழக்கை வாபஸ் வாங்க முடியுமா.
இதேபோன்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு மக்கள் உரிமை போராட்டத்திற்காக நடத்தப்பட்ட போராட்டங்களிலே பங்கேற்ற பொதுமக்கள் மீது, எதிர்க்கட்சி தலைவர்கள் மீது, எதிர்க்கட்சியின் நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகளையும் வாபஸ்பெற ஸ்டாலின் முன் வருவாரா. அல்லது பாராட்டு விழா நடத்துவது என்கிற ஒரு நிலை வந்தால் தான் வாபஸ் வாங்குவாரா? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

