இப்படி நடந்தால் தி.மு.க., இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்; இ.பி.எஸ்., பேச்சு
இப்படி நடந்தால் தி.மு.க., இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்; இ.பி.எஸ்., பேச்சு
ADDED : ஜன 18, 2025 07:52 PM

சென்னை: ஊடகங்கள், பத்திரிகைகள் உண்மை செய்தியை போட்டாலே, தி.மு.க., இருக்கும் இடம் தெரியாமல் போய் விடும் என்று இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
சென்னை கண்ணகி நகரில் நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறியதாவது: அரசுக்கு வருமானம் இல்லாத போதும், கொரோனா காலத்தில் அ.தி.மு.க., ஆட்சியின் போது, ரூ.36 ஆயிரம் கோடியை மக்களுக்காக செலவு செய்தோம் அதுபோக 11 மாதம் ரேஷன் கடையில் சர்க்கரை, அரிசி கொடுத்தோம். இப்போ ரேஷன் கடையில் பொருட்களே கிடைப்பதில்லை. அல்வாதான் கொடுக்கிறார்கள்.
2017ல் நான் முதல்வராக பொறுப்பேற்கும் போது, கடுமையான வறட்சி. சென்னையில் குடிநீர் பிரச்னை இருந்தது. ரயிலில் தண்ணீர் கொண்டு வந்து ஊத்தினோம். அதுபோன்ற பிரச்னை உங்களுக்கு (தி.மு.க.,) இருக்கிறதா? இது ஆட்சியே இல்லை.
ஏழை மக்களுக்கு அற்புதமான திட்டமான அம்மா மினி கிளினிக்கை மூடி விட்டார்கள். அ.தி.மு.க., கொண்டு வந்த நல்ல திட்டங்களை நிறுத்துவது தான் இந்த தி.மு.க., அரசின் சாதனை. இந்தியாவிலேயே கல்வியில் தமிழகம் முதலிடம் வகிக்கக் காரணமே அ.தி.மு.க., ஆட்சி தான். தி.மு.க., ஆட்சியில் 100க்கு 32 பேராக இருந்த உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை, அ.தி.மு.க., ஆட்சியில் 100க்கு 54ஆக உயர்த்தினோம்.
அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில் 2வது கட்ட திட்டத்தை இன்னும் ஏதேதோ காரணம் சொல்லி தி.மு.க., அரசாங்கம் முடிக்காமல் இருந்து வருகிறது. எந்த திட்டங்களையும் கொண்டு வராமல் மக்களை ஏமாற்றுகிறது தி.மு.க., ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது. ஊடகங்கள், பத்திரிகைகள் உண்மை செய்தியை போட்டாலே, தி.மு.க., இருக்கும் இடம் தெரியாமல் போயிடும்.
மகளிர் உரிமைத் தொகை நீங்க எங்கே கொடுத்தீர்கள்? நாங்க போராடி தானே பெற்றுக் கொடுத்தோம். 18 மாதங்கள் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்தோம். 28 மாதங்கள் கழித்து கொடுத்து, இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
2,400க்கும் மேற்பட்ட பஸ்கள் வாங்கியதாக கவர்னர் உரையில் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், 3000க்கும் மேற்பட்ட பஸ்களை வாங்கியதாக சொல்கிறார். இதைப் பற்றி கேட்டால், 500 சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். புள்ளி விபரத்தோடு பேசுவேன். சட்டசபையில் நான் பேசுவதை நேரலையில் ஒளிபரப்பினால், தி.மு.க.,வுக்கு மக்கள் சாவு மணி அடித்து விடுவார்கள். தில் இருந்தால் காட்டு. சரக்கு இருந்தால் தான் சொல்ல முடியும். வெத்து வேட்டாகத்தான் இருக்கிறது, இவ்வாறு அவர் கூறினார்.